ஆக்ரா: தாஜ்மஹால் வரும் செப்.,21ல் திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
கொரோனா பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் கடந்த மார்ச் 25 முதல் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் அதை பார்வையிட சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் முன்னேரே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 ஷிப்டு என்ற முறையில் மொத்தம் 5,000 சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடவடிக்கையாக தாஜ்மஹால் முழுவதும் கிருமி நாசினியால் தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயிலில் ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட உள்ளது. வெளியூர்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வர இருப்பதால் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி அவசியம் என்று சுற்றுலாத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.