மஞ்சள் ஆராய்ச்சி மைய விவகாரம்: எம்.எல்.ஏ.,வை கண்டித்து போஸ்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் ஆராய்ச்சி மைய விவகாரம்: எம்.எல்.ஏ.,வை கண்டித்து போஸ்டர்

Added : செப் 13, 2020
Share

ஈரோடு: மஞ்சள் ஆராய்ச்சி சிறப்பு மையம் அமைக்கும் விவகாரத்தில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை கண்டித்து, போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மொடக்குறிச்சி அருகே, வடுகப்பட்டி பேரூராட்சி, எலவநத்தம் சாலை, ஐந்து கண்றை வாய்க்கால் பகுதியில், விவசாய கூட்டுறவு நில குடியேற்ற சட்ட அமைப்பினர், விவசாயிகளுக்கு வழங்கிய, 25 ஏக்கரில் மஞ்சள் ஆராய்ச்சி சிறப்பு மையம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அவ்விடத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழித்து, வீடு, கிணறுகளை அகற்றிவிட்டு, மையம் அமைக்க அளவீட்டுப்பணி தற்போது நடக்கிறது. இதற்கு விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வடுகப்பட்டியில் தரிசு நிலம் உள்ளது. அதில் மையத்தை அமைக்கவும் வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்விடத்தில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் விவசாயம் செய்வதால், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியை சந்தித்து முறையிட்டனர். ஆனாலும், இடத்தை அளவீடு செய்து, கல் நட்டு, விரைவில் பணியை துவங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை என்ற பெயரில், எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஈரோடு, மொடக்குறிச்சி பகுதியில், நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.அதில், 'தாங்கள் விவசாயம் செய்து வரும் விளைநிலத்தை தவிர்த்து, பிற பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும். இம்முயற்சியை முதல்வர் எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர். இதே அமைப்பின் பெயரில், கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X