கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்களை, நேற்று இரண்டாவது நாளாக தேடும் பணி நடந்தது. இதில், ஒரு வாலிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, மோகன்ராவ் காலனியை சேர்ந்தவர் யாசிர், 19; துணி வியாபாரம் செய்து வந்தார்; இவரும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவை அடுத்த பானசவாடியை சேர்ந்த இர்பான், 26, என்பவரும், நேற்று முன்தினம் மாலை, கும்மனூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், குளித்து கொண்டிருந்த இருவரும், நீரில் அடித்து செல்லப்பட்டனர். தகவலின்படி சென்ற, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இருவரையும் தேடினர். இரவானதால் தேடும் பணியில் தோய்வு ஏற்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக, தீயணைப்புத் துறையினர் மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இணைந்து, வாலிபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், யாசிர் சடலம் கிடைத்த நிலையில், இர்பானை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், சம்பவம் நடந்த இடத்திலிருந்து, இர்பான் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE