பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: திருவாய்மொழி

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020
Share
Advertisement
புத்தக அறிமுகம்,திருவாய்மொழி,திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்,முறிந்தவானவில்,கீர்த்தனமாலை,சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதுமை உரை,வீணையடி நீ எனக்கு, கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. திருவாய்மொழி


பதிப்பாசிரியர்: பி.கே.வெங்கடேசன்
வெளியீடு: பாதுகா பவனம்
கோயமுத்துார் பப்ளிக் ஸ்கூல் ரோடு,
வேலப்ப நாயக்கன் புதுார், சரவணம்பட்டி போஸ்ட்,
கோவை - 641 035.
அலைபேசி: 99940 18151
பக்கம்: 287 விலை: ரூ.150

ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இவை அனைத்தும் ஓத இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில், 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும் வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நுாலாகும்.
இந்நுால், 'எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நுால்' என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது. திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய சில பாசுரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. திருவாய்மொழிப் பாசுரங்களை எப்படி பாராயணம் செய்வது என்ற தகவல்களை பக்க எண்ணுடன் வழங்கியுள்ளது சிறப்புக்குரியது.இந்த நுால் பதிப்பாக்கம் பெற, தென் மாநிலங்கள் முழுக்க உள்ள சான்றோர் பலர் உதவிக்கரம் வழங்கியுள்ளனர். எனவே, விலையில்லா பதிப்பாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பதிப்பாசிரியரின் கடினப் பணி கண் முன்னே தெரிகிறது. பொதுத் தனியன்கள், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, இராமாநுச நுாற்றந்தாதி முதலான பாகங்களும் அடங்கியுள்ளன. பெருமானை வழிபடத் துணை செய்ய ஏற்ற வகையில் பெரிய எழுத்துகளில் அழகுற அச்சிடப்பட்டுள்ளது.திவ்யப் பிரபந்தம் முழுமையும் ஓத இயலாதோருக்குக் கிடைத்த அரும்பொக்கிஷம். இறையடி சேர வழிகாட்டும் பெருமையுடைய இந்நுால் அனைவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்று.
- முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


02. கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்


ஆசிரியர்: டாக்டர் எம்.பிர்லா பவளம்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி: 1447, தி.நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 192 விலை: ரூ.160


latest tamil news
மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நுால். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார்.
எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும்.
ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி படித்தவர்கள், தமிழில் எழுதும்போது ஏற்படும் தடுமாற்றம் எதுவும் இன்றி எளிய நடையில் அமைந்துள்ளது. எல்லா வீட்டிலும், பொது நுாலகங்களிலும் இருக்க வேண்டிய நுால்.
- முகிலை ராசபாண்டியன்


03. வீணையடி நீ எனக்கு


ஆசிரியர்: வரலொட்டி ரெங்கசாமி
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர், மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 220 விலை: ரூ.240


latest tamil news


Advertisementநேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்து விடும்.
அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பது தான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அன்னையின் சூட்சும வடிவம்... அன்பு தேடி ஏங்குபவர்களை அரவணைக்கும் அட்சய பாத்திரமாகவே விளங்கும் என்பதை, தன் புத்தகங்கள் வழியே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
- எம்.எம்.ஜெ.,


04. திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதுமை உரை


ஆசிரியர்: சுரேஜமீ
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி: 1447, சென்னை- - 17.
தொலைபேசி: 044 - -2434 2926
பக்கம்: 94 விலை: ரூ100


latest tamil news
உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில் உரை, வார்ப்புரை, சிறுகதைகள் எனப் பலவும் வந்த வண்ணமுள்ளன.
செறிந்த செய்யுளின் கருத்தை அதன் பொருள் மாறாமல் வாசிப்புக்கு எளிமைப்படுத்தி வழங்கப்படுவது உரை. குறள்களுக்கான உரைக்கு அப்பாற்பட்டு புதுமைச் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாறுபட்ட எண்ணத் தெறிப்புகள் பலவும் பயனுள்ள அறிவுரைகளாக விளங்குகின்றன.அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் முப்பால் அடங்கிய திருக்குறளின் 133 அதிகாரங்களில், அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களின் குறள்களைச் சார்ந்து தன் மாறுபட்ட எண்ணங்களை எளிய வழிகாட்டு வாசகங்களாக வழங்கியிருக்கிறார்.
வாய்மை அதிகாரத்தில், 'தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்ற குறளுக்கு, 'உன்னுள் அறிந்த உண்மையை மறைத்துப் பொய் உரைத்தல் கூடாது. தவறிப் பொய் சொல்ல நேர்ந்தால், அது உள்ளுணர்வை அனலாக்கிக்கொண்டே இருக்கும்' என்று விளக்கப்பட்டுள்ளது. அறம் கூறும் நுால்.
- மெய்ஞானி பிரபாகரபாபு


05. சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்


ஆசிரியர்: கே.மகாலிங்கம்
வெளியீடு: மூன்றெழுத்து பதிப்பகம்
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.
அலைபேசி: 94440 19079
பக்கம்: 456 விலை: ரூ.400

கடந்த, 1972 முதல், 1987ம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆர்., அவர்களின் நேர்முக உதவியாளராக இருந்த கே.மகாலிங்கம், புரட்சி தலைவர் பற்றி எழுதிய நுால் இது. அந்த காலத்து நடிகரான, குண்டு கருப்பையாவின் மகனான இவர், எம்.ஜி.ஆரின் உதவியாளராக சேர்ந்து, அவரை பற்றி அறிந்தவற்றை தொகுத்து எழுதியுள்ளார்.
புரட்சித் தலைவரின் வாழ்க்கை சம்பவங்கள், அவரது மனிதாபிமானம், வள்ளல் குணம், பண்பாடு, அன்பு உள்ளம், நெஞ்சுரம், உரிமைகளை காக்க போராடும் போர்க் குணம் என்று, ஒவ்வொரு குணநலன்களை மிகச் சிறப்பாக இந்நுாலில் வெளிப்படுத்தியுள்ளார், நுாலாசிரியர்.
- என்.எஸ்.,


06. கீர்த்தன மாலை


ஆசிரியர்: எஸ்.வி.ரமணி
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி: 1447, சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்:124 விலை: ரூ.100


latest tamil news
பக்தியில் மனம் லயித்து எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். 147 பாடல்கள் உள்ளன. எளிமையாக புரிந்து கொள்ளும் வடிவத்தில் உள்ளன; இசையுடன் பாடி உருக ஏற்றது. இந்த பாடல்களை எழுதிய ரமணி, ஆப்ரிக்க நாடான கென்யா, நைரேபி நகரில் வசிக்கிறார். நாடு கடந்தும், இறை எண்ணத்தில் ததும்பி துதிகளை இயற்றியுள்ளார். பக்தி பரவசத்தில் கனிந்துருகி பாட உதவும் கீதங்கள்.


07. முறிந்த வானவில்


ஆசிரியர்: கோ.வசந்தகுமரன்
வெளியீடு: தமிழ் அலை
80/24பி, பார்த்தசாரதி தெரு,
தேனாம்பேட்டை, சென்னை - 86.
தொலைபேசி: 044 - 2434 0200
பக்கம்: 144 விலை: ரூ.100


latest tamil news
வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நுால். அழகியலை, மிக எளிய நடையில், சின்ன சின்ன கவிதைகளாக படைத்துள்ளார். சமகால சூழலை, நாலு வரிகளில், 'நச்' என்று பதிய வைக்கின்றன சில. நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என, சூழலியலை அழகிய வடிவில் பிரதிபலிக்கின்றன கவிதைகள்.
'ஒரு கூழாங்கல்லை மணலாகச் செதுக்கும் வரை ஓய்வதில்லை நதி...' என்கிறது ஒரு கவிதை. இப்படி, இயற்கை அனுபவங்களின் சாரம் கவிதைகளில் கொட்டி கிடக்கிறது. வாழத் துடிப்போருக்கு உற்சாகத்தை துாண்டும் நுால்.
- டி.எஸ்.ராயன்


08. திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்


ஆசிரியர்: கமலா கந்தசாமி
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்
சென்னை - 49.
தொலைபேசி: 044 - 2650 7131
பக்கம்: 104 விலை: ரூ.40


latest tamil news
திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள் சிலவே.சுய முன்னேற்ற சிந்தனை தரும் பாடல்கள், கருத்தாழம் மிக்க வரிகள் கொண்ட தத்துவப் பாடல்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அத்தகைய பாடல்களை, 45 அத்தியாயங்களாக தொகுத்து, உட்கருத்தை விளக்கி, அதன் சுவையை அறிய வைக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X