புதுடில்லி: அவசரச்சட்டத்துக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வரும் 4 மசோதாக்களை, எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் என காங்., கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடர் செப்., 14ம் தேதி முதல், அக்.,1ம் தேதி வரை, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை மாற்ற கொண்டு வரப்படும் 11 மசோதாக்கள் உட்பட, 23 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக காங்., எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டி: பார்லி., கூட்டத்தொடரில், அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக 11 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதில், வங்கி சீர்திருத்த சட்ட மசோதா மற்றும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை காங்., கட்சி கடுமையாக எதிர்க்கும். எங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகும் எதிர்கட்சிகளோடு ஆலோசித்து, ஒருங்கிணைந்து எதிர்ப்போம்.

கொரோனா விவகாரம், லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல், பொருளாதார வீழ்ச்சி, விமானநிலையங்கள் தனியார் மயம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது குறித்து லோக்சபா, ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறோம். எங்களது கேள்விகளுக்கு பிரதமர் மோடி இரு அவைகளிலும் பதிலளிக்க வேண்டும். அவர் பார்லி.,க்கு வராவிட்டால், அவரை வர சொல்லி வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE