தமிழ்நாடு

வகுப்பறைக்கு ஐந்து பேர்! தனியார் பள்ளிகள் திட்டம்: எதிர்கால சவாலுக்கு தயார்!

Added : செப் 13, 2020
Share
Advertisement
வகுப்பறைக்கு ஐந்து பேர்! தனியார் பள்ளிகள் திட்டம்: எதிர்கால சவாலுக்கு தயார்!

கோவை:ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்,பள்ளிகள் திறக்கும் பட்சத்தில், சுழற்சி முறையில் வகுப்பு கையாளுவது, வகுப்பறை சூழலை மாற்றுவது உள்ளிட்ட சில புதிய நடைமுறைகளை பின்பற்றி, எதிர்கால சவால்களை சந்திக்க, தனியார் பள்ளிகள் சில திட்டமிட்டுள்ளன.சீனாவின், வூகான் மாகாணத்தில் தான், முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்தாண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இத்தொற்று, படிப்படியாக குறைந்து, அங்கு இயல்பு நிலை திரும்பியது. கடந்த மே மாதமே, பள்ளிகள் திறக்கப்பட்டன.அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான், தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போதுதான் படிப்படியாக தளர்வுகளுடன், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட இச்சூழலில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளிகள் திறப்பது குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
இதை பின்பற்றி, தமிழக அரசும், பள்ளிக்கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், குழு அமைத்து, வழிகாட்டி நெறிமுறைகள் தயாரித்து வருகிறது.இதில், பாடத்திட்ட குறைப்பு, வகுப்பறைக்குள் மாணவர்கள் அமர வைக்க வேண்டிய விதம், சுழற்சி முறையில் பாடம் நடத்துவது குறித்த, சில முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளும், பள்ளிகளை மீண்டும் திறந்த பின், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள, இப்போதே தயாராக துவங்கி விட்டன.சுழற்சி முறையில், காலை, மதியம் மட்டும் வகுப்பு நடத்தப்படும். ஒரு வகுப்பறைக்கு, ஐந்து மாணவர்களே அமருவர். உரிய சமூக இடைவெளி பின்பற்ற, உணவருந்தும் நேரம் மாற்றியமைக்கப்படும். பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயமல்ல. பள்ளி செயல்பாடுகளை மாணவர்கள் வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ள, போதிய தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
வளாகத்திற்குள் நுழையும் முன்பே, உடல் வெப்பநிலை பரிசோதித்து அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.-- -மூர்த்தி, தலைவர் மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி.மாநில அரசு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்ட பிறகே, பள்ளிக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், குறிப்பிட்ட நேரத்திற்கு, வகுப்புகள் கையாள திட்டமிட்டுள்ளோம்.
தொற்று வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், சாதக, பாதகங்களை தெளிவாக திட்டமிட்டு, பெற்றோரின் பரிந்துரைகளை ஏற்ற பின், பள்ளிகள் இயக்கப்படும்.- -பூவண்ணன், முதல்வர்சுகுணா பிப் பள்ளி.
வகுப்பறையின் மொத்த மாணவர் எண்ணிக்கையை இரண்டாக பிரித்து, தனித்தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படுவர். பள்ளி பேருந்துகளில், மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கேமரா மூலம், உரிய சமூக இடைவெளி பின்பற்றுவது உறுதி செய்யப்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்தோ, உடல் நலக்குறைவுடனோ பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. எங்கள் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும், வை-பை வசதி இருப்பதால், வீட்டிலிருந்தே, வகுப்பறை நிகழ்வுகளை காணலாம்.- மணிமேகலை, நிர்வாக அறங்காவலர்எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X