அரசியல் செய்தி

தமிழ்நாடு

பார்லி., - சட்டசபை கூடியது

Updated : செப் 14, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
parliment, mansoon sesson, TN Assembly Session, begins today

சென்னை: கொரோனா தொற்று பரவும் சூழலில், பலத்த பாதுகாப்புக்கு இடையில், சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக சட்டசபை இன்று கூடியது. 'மூன்று நாட்கள் சட்டசபை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரும், இன்று துவங்கியது. இக்கூட்டம் வார விடுமுறையின்றி, 18 நாட்களுக்கு நடக்கவுள்ளது. பார்லி., தொடர் குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
தமிழக சட்டசபை, பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச் 24ல் நிறைவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன், சட்டசபை கூட்டம் முடிக்கப்பட்டது.


சமூக இடைவெளி


சட்டசபை விதிகளின்படி, கூட்டம் முடிந்து ஆறு மாதம் நிறைவடைவதற்குள், அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, இன்று முதல், மூன்று நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த, சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் முடிவு செய்தது.

வழக்கமாக, சட்டசபை கூட்டம், தலைமைச் செயலக கட்டடத்தில் அமைந்துள்ள, சட்டசபை கூட்ட அரங்கில் நடைபெறும். தற்போது அந்த அரங்கில், கொரோனா நோய் பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், சென்னை கலைவாணர் அரங்கில், கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, அரங்கின் மூன்றாவது தளத்தில், உரிய இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்க உள்ள, முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், அலுவலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் என, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


கொரோனா தொற்றுபரிசோதனையில், மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அலுவலர்கள் சிலருக்கும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதியானவர்களுக்கு, தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று காலை, 10:00 மணிக்கு சட்டசபை கூடுகிறது. இன்றைய கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ., அன்பழகன், எம்.பி., வசந்தகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மறைவுக்கும், கொரோனா தொற்று பரவல் காரணமாக இறந்தவர்களுக்கும், இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்பட உள்ளது.

நாளைய கூட்டத்தில், கொரோனா நோய் பரவல், 'நீட்' தேர்வு, தேசிய கல்விக் கொள்கை உட்பட பல்வேறு பிரச்னைகளை, சபையில் எழுப்ப, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால், சட்டசபை களைகட்டும் என, கூறப்படுகிறது.நாளை மறுதினம், 2020 - 21ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதி நிலை அறிக்கையை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மீது, விவாதமின்றி ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

கூட்டம் நடக்கும் அரங்கில், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள், உள்ளே வருவதை தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பார்லிமென்ட்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச்சில் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு பின், மழைக்கால கூட்டத் தொடருக்காக பார்லிமென்ட், ஜூலையில் கூட்டப்பட்டிருக்க வேண்டும். கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால், தொடர் துவங்குவது தாமதமானது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார நடைமுறைகளுடன், கூட்டத் தொடர் இன்று துவங்கி, அடுத்த மாதம் 1ம் தேதி வரை, வார விடுமுறை இன்றி, 18 நாட்களுக்கு நடக்கவுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாட்டுடன் குறைந்த அளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நடக்கும் கேள்வி நேரமும் இந்த கூட்டத் தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், தொடர் துவங்குவதற்கு முதல் நாள், சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் சார்பில், அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடப்பது வழக்கம். இதில், பார்லி.,யில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், தற்போது அனைத்துக் கட்சி கூட்டமும், ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக, சபை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை, சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூட்டினார். இதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பா.ஜ.,வின் அருண் மேஹ்வால், காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாததற்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்தனர்.


புயலை கிளப்பும்


இந்த கூட்டத் தொடரில், லடாக் பகுதியில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு ஆகிய விஷயங்களை எழுப்பி, அரசு தரப்புக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியை முறியடிக்க, ஆளும் கட்சி தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதால், மழைக்கால கூட்டத் தொடர், பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கேள்விக்கு என்ன பதில்?


பார்லிமென்ட் இன்று துவங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, பார்லிமென்டில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் அறக்கட்டளை நிதி குறித்து, வெளிப்படை யான அறிக்கை வேண்டும். இந்த கூட்டத் தொடரில், விவசாயம் சார்ந்த மசோதா, வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட நான்கு மசோதாக்களுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். ஒருமித்த கருத்து உடைய கட்சிகளுடன் இணைந்து, இரண்டு சபைகளிலும் இந்த மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் தடுக்க முயற்சிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.


மூத்த எம்.பி.,க்கள் பங்கேற்பரா?


மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, அனைத்து எம்.பி.,க்களும் கொரோனா பரிசோதனை செய்த பின், கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏழு மத்திய அமைச்சர்களும், 24க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும், ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மே.வங்க பா.ஜ., - எம்.பி.,க்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப் பட்டது.இரண்டு சபைகளிலும் உள்ள, 785 எம்.பி.,க்களில், 200க்கும் மேற்பட்டோர், 65 வயதை கடந்தவர்கள். இவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால், அவர்கள் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-செப்-202011:37:08 IST Report Abuse
Lion Drsekar இரண்டு கூட்டங்களும் மிக முக முக்கியம் வாய்ந்தது, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-செப்-202007:41:41 IST Report Abuse
நிலா டில்லியில் எம்.பிகள் கேண்டீன் உண்டா? நல்ல தின்றுவிட்டு குறட்டைவிட்டு தூங்கிவிட்டு விமான பயணம் செய்வார்கள் மக்கள் பணம் வீண் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள் நம் தமிழக எம்.பிகள் இந்தியை பிடித்து கிழிப்பார்கள் வெத்துவேட்டு எம்.பிகள்
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-செப்-202007:35:07 IST Report Abuse
நிலா டில்லியில் சோனியா வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார் தமிழத்தில் எதிர்கட்சி இருக்கவே இருக்கு வெளி நடப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X