சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தே.மு.தி.க.,வின் நிலை என்ன?

Updated : செப் 15, 2020 | Added : செப் 13, 2020
Share
Advertisement
 இது உங்கள் இடம்


கே.கே.பாலசுப்ரமணியன், கோவையிலிருந்து எழுதுகிறார்:


இப்பகுதியில், 'காமெடி பண்ணாதீங்க, பா.ஜ.,வினரே' என்ற தலைப்பில், பெங்களூரு வாசகர் எழுதிய கடிதம் பிரசுரமாகியிருந்தது. பா.ஜ.,வினருக்கு இணையாக, தே.மு.தி.க.,வினரும் காமெடியில் கலக்குகின்றனர்.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீது, மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நடிகர் விஜயகாந்த், தே.மு.தி.க.,வை துவக்கினார்.கடந்த, 2006 சட்டசபைத் தேர்தலில், 232 தொகுதிகளில், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட்டது. யாரும் எதிர்பாராத வகையில், 8.45 சதவீத ஓட்டுகள் பெற்று, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. அடுத்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை, தே.மு.தி.க., பெற்றது.
விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டதும், கட்சி, அவரின் மனைவி பிரேமலதாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தி.மு.க.,வையும், பா.ம.க.,வையும் விமர்சித்த, தே.மு.தி.க.,வில், விஜயகாந்த், அவரின் மனைவி, மைத்துனர், மகன் என, குடும்ப அரசியல் தலைதுாக்கியது. அன்றிலிருந்து, தே.மு.தி.க.,விற்கு இறங்கு முகம் தான்! 'இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று' என நினைத்து தான், தே.மு.தி.க.,வை மக்கள் ஆதரித்தனர். அது இல்லையென்று, பிரேமலதா நிரூபித்து வருகிறார்.
கடந்த, 2016 தேர்தலில், 104 தொகுதிகளில் போட்டியிட்டு, 103 தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்த, தே.மு.தி.க., வெறும், 2.39 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றது.இந்நிலையில், 'வரும் தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டு, பலத்தை நிரூபிக்கப் போகிறது' என்கிறார், பிரேமலதா. தே.மு.தி.க.,வின் தற்போதைய ஓட்டு சதவீதம் குறித்து, பிரேமலதாவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. வரும் தேர்தலில், தனித்து நின்று, கட்சியின் உண்மையான பலத்தை, தே.மு.தி.க., அறிந்து கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளியை ஏமாற்றாதீர்!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த கல்வி ஆண்டில், செப்., 10ம் தேதி வரை, ஒன்றாம் வகுப்பிற்கு மட்டும், அரசு பள்ளிகளில், 2.75 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, 12.88 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், அரசு பள்ளியில் மட்டும், 8.8 லட்சம் மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளதாக, புள்ளி விபர தகவல் வெளியாகிஉள்ளது.

'புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை, 'ஏமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பின் தான், அரசு பள்ளிகளில், இந்த கல்வி ஆண்டு, புதிதாக எத்தனை லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்ற உண்மை நிலவரம் தெரிய வரும்.இம்மாதம் இறுதி வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என்பதால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இவ்வகை பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு, 'கொரோனா' ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு தான், முக்கிய காரணம்.தனியார் பள்ளிகளில் படித்து வரும் தம் பிள்ளைகளுக்கு, சென்ற கல்வியாண்டுக்கான கட்டணம் கூட முழுமையாக செலுத்தாத பெற்றோர், பல ஆயிரம் பேர் உள்ளனர்.

அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதில் தவறில்லை. அதேவேளையில், தனியார் பள்ளியில், சென்ற ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தாமல், பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் கூட பெறாமல், அப்படியே அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவது சரியல்ல.அது, தனியார் பள்ளி நிர்வாகத்தை ஏமாற்றுவது போல் ஆகும்.தனியார் பள்ளியில் ஆசிரியர், பணியாளர், பஸ் ஓட்டுனர், காவலாளி, தோட்ட தொழிலாளி என, பல்வேறு தரப்பினருக்கும், பல மாதங்களாக ஊதியம் கொடுக்க முடியாமல், பள்ளி நிர்வாகம் திணறி வருகிறது.

தனியார் பள்ளிகளில் இருந்து, மாற்றுச் சான்றிதழ் கூட வேண்டாம்; 'ஆதார்' அட்டை மட்டும் இருந்தால் போதும் என, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து விடுவோம் என்ற பெற்றோரின் மனப்போக்கு சரியல்ல.எனவே, தனியார் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி, பல ஆயிரம் பேரின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.

இந்நாடு 'குட்டிச்சுவராய்' போகும்!

என்.ஜே.யோகேஷ் குமார், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்லுாரி தேர்வில், 'அரியர்' தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும், 'பாஸ்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். உடனே, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'அரியர் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும், தேர்ச்சி அளிக்க வேண்டும்' என, குரல் எழுப்பியுள்ளார்.முறையாக கல்லுாரி சென்று, பாடம் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, இவர்களின் அரசியல் விளையாட்டில் அவமானப்படுத்தியுள்ளனர்.
அரியர் மாணவர்களின் லட்சியம், வாழ்க்கை முறை பற்றி, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு தெரியவில்லையோ?நண்பர்களுடன் அரட்டை, கையில் எந்நேரமும் ஸ்மார்ட் போன், பெண்களை சீண்டுவது, நடிகரின் ரசிகர் மன்ற உறுப்பினராக இருப்பது போன்றவையே, அரியர் மாணவர்களின் அன்றாட செயல்பாடு.அவர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. என்ன தேர்வு எனத் தெரியாமல், தேர்வறைக்குள் நுழையும் மாணவர்களும் உள்ளனர்.

அப்படிப்பட்டோர் எல்லாம், 'பாஸ்' என்றால், அவர்களால், இந்நாடு எத்தகைய விபரீதத்தை அனுபவிக்கும் என்பதை, முதல்வர் ஏன் உணரவில்லை?அவர்களுக்கு, 100க்கு, 100 மதிப்பெண் வழங்கி, அரசு கவுரவிக்க வேண்டும். பாவம், அவர்களுக்கு எத்தனையோ உருப்படியான காரியங்கள் செய்ய வேண்டியிருக்கு!அந்த அரியர் மாணவர்கள் தான், நாளை அரசியல்வாதிகளாக மாறுவர்; நாடு, 'குட்டிச்சுவராய்' போகும்!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X