சென்னை:பத்து நாட்களில், கலைவாணர் அரங்கத்தை, பொதுப்பணித் துறையினர், அசல் சட்டசபையை போலவே மாற்றி அமைத்து அசத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம், வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கம் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள், கைத்தறி உள்ளிட்ட பொருட்கள் கண்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இங்கு, சட்டசபை கூட்டம் நடத்த, சபாநாயகர்தனபால், சட்டசபை செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் முடிவெடுத்தனர். இது குறித்த அறிவிப்பு இம்மாதம், 3ம்தேதி வெளியானது.
இதையடுத்து, கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை துவங்கியது. மூன்றாவது தளத்தில், 1,000 பேர் அமரும் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல்வர், துணை முதல்வருக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் ஓய்வெடுக்கவும், ஆலோசனை நடத்துவதற்காகவும், வசந்த மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. பிரமாண்ட கேன்டீன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
சட்டசபை அரங்கில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, நான்கு அடி இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஜார்ஜ் கோட்டையில் உள்ளது போல, சட்டசபை அரங்கில் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா உள்ளிட்ட 14 தலைவர்களின் ஆளுயர படங்களும் வைக்கப்பட்டு உள்ளன. காற்று வசதிக்காக, மேற்கூரையில் ஆங்காங்கே சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டு உள்ளது. அனைவரது மேஜையிலும், கிருமிநாசினி, குடிநீர் பாட்டில் வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு, தற்காலிக சட்டசபையை, 10 நாட்களில், அசல் சட்டசபையை போலவே, பொதுப் பணித் துறை மாற்றி அமைத்துள்ளது. ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடியில், அனைவரும் தவித்து வந்தனர். நிரந்தரமாக சட்டசபையை இங்கு மாற்றும் ஆசையை ஆளும்கட்சி, எதிர்கட்சியினருக்கு துாண்டும் வகையில், இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
தரைதளத்தில், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு பிரமாண்ட அறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவுப்படி, பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர்ராஜாமோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசகேரன் உள்ளிட்ட அதிகாரிகள், இரவு, பகலாக முகாமிட்டு இப்பணிகளை செய்து முடித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE