விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி மற்றும் வீடு கட்டும் திட்டங்களில், தமிழகத்தில், 110 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது.

தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 'இந்த விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.பிரதமர் மோடியின் கனவு திட்டம் இது. இதில் இப்படி ஊழல் நடந்துள்ளதே என, பிரதமர் கவலைப்பட்டாராம்.
'விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தோடு, மோடியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழகத்தில் ஊழலுக்கு வழிகாட்டி விட்டதே' என, பா.ஜ.,வினரும் வருத்தப்படு கின்றனர். இந்த ஊழல் குறித்த முழு விபரங்களையும் உடனடியாக தரும்படி, உளவுத் துறையினரை, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊழலில் தமிழக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா எனவும் அறிக்கை தருமாறு உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு, இந்த திட்டத்தில் ஊழல் நடக்காதவாறு இருக்க என்ன செய்யலாம் எனவும் ஆலோசனை செய்து வருகிறார் மோடி.'சில விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தியது தான் முறைகேடு ஏற்பட வழியாகி விட்டது. தமிழக அரசுக்கும், இந்த ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இதை மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக தெரியவில்லை. சி.பி.ஐ., விசாரணையில் தான் உண்மை வெளிவரும் என்கின்றனர் பா.ஜ.,வினர். 'இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, தமிழக அரசு சிபாரிசு செய்தால், உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்' என்கின்றனர் அதிகாரிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE