பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
 நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு  வருமா

நெல்லிக்குப்பம்; கலெக்டர் உத்தரவிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில், பஸ் நிலையம் கட்ட, கடந்த 2005ல், அப்போதைய முதல்வராக இருந்த ஜெ., ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகள் துவங்கியது. அதன்பிறகு தி.மு.க., ஆட்சியின்போது பணிகள் முடிந்ததால், அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், 2008ல் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.ஓரிரு நாட்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வந்த நிலையில், அதன்பிறகு உள்ளே செல்லாமல் வெளியே நின்று பயணிகளை இறக்கி ஏற்றி செல்கின்றன. அப்பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால், பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றும் போதும், இறக்கும்போதும் வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது.இது குறித்து பொது மக்கள், வியாபாரிகள் நீண்ட நாட்களாக நெல்லிக்குப்பம் நகராட்சி, கமிஷனர்களிடம் புகார் தெரிவித்தும், எவ்வித பயனும் இல்லை. நகராட்சியில் புதியதாக பொறுப்பேற்கும் கமிஷ்னர்கள் பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளும் பஸ் நிலையத்தை பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதோடு சரி.ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்றுவர கலெக்டர், கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், பஸ் கட்டணம் மட்டும் முறையாக வசூலிக்கப்படுகிறது.பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும், போலீசார் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக பஸ் நிலையம் மாறியுள்ளது.இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன் நெல்லிக்குப்பம் நகராட்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, பஸ் நிலையத்தை பார்வையிட்டார். அப்போது பஸ்கள் உள்ளே வருவதில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.அதற்கு, பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள, குற்ற வழக்கு வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். தனியார் வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதிக்க கூடாது. நகராட்சி அதிகாரிகள், போலீசார் இணைந்து பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால் கலெக்டர் உத்தரவிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நகராட்சி அதிகாரிகள், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.வழக்கம்போல், பஸ்கள் வெளியே நின்று செல்வதால், பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுவதால், பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X