எதிர்பார்ப்பு : வீட்டுக்கடன் வட்டி குறைப்பு விவகாரத்தில்... வங்கிகள் நடவடிக்கை எடுக்க முன்வருமா?| Dinamalar

இந்தியா

எதிர்பார்ப்பு : வீட்டுக்கடன் வட்டி குறைப்பு விவகாரத்தில்... வங்கிகள் நடவடிக்கை எடுக்க முன்வருமா?

Added : செப் 14, 2020
Share
 எதிர்பார்ப்பு : வீட்டுக்கடன் வட்டி குறைப்பு விவகாரத்தில்... வங்கிகள் நடவடிக்கை எடுக்க முன்வருமா?

வீடு கட்டுவது, வியாபாரம் செய்வது, வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளில் பொதுமக்கள் கடன் வாங்குகின்றனர்.

இதுபோல, வங்கிகளில் கடன் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக திருப்பி செலுத்தி விடுகின்றனர்.குறிப்பாக, வீடு கட்டுவது என்பது நடுத்தர மக்களின் கனவாக உள்ளது.எந்த வங்கியில் வட்டி குறைவாக உள்ளது, கடன் பெறுவதற்கான நடைமுறை கட்டணங்கள் குறைவாக உள்ளது என அலசி ஆராய்ந்து கடனை பெறுகின்றனர்.வாங்கிய கடனை தங்கள் சக்திக்கு ஏற்ப 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என காலக்கெடு வைத்து, மாதந்தோறும் தவறாமல் தவணையை செலுத்தி வருகின்றனர்.

தங்களது வாழ்நாளில் பெரும்பகுதியை கடனை அடைப்பதற்காகவே செலவிடுகின்றனர்.சமீபகாலமாக, பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்கள் நலன் கருதியும் வங்கிகளுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது.இதன் எதிரொலியாக, வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.உதாரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன், வீட்டு கடனுக்கு 14 சதவீத வட்டி வசூலிக்கப்பட்டது. இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 8 சதவீதம் என்ற அளவில் குறைந்தது.தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை கருத்தில் கொண்டு, வீட்டு கடனுக்கான வட்டி 6.95 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கியின் வைப்புத் தொகை, கடன் மற்றும் செலவுகள் அடிப்படையில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.இருந்தபோதும், இந்த வட்டி குறைப்பை கடன் பெற்றுள்ள தங்களது வாடிக்கையாளர்களை அழைத்து முறைப்படி பெரும்பாலான வங்கிகள் தெரிவிப்பதில்லை. இதனால், வாடிக்கையாளர் பல ஆண்டுகளுக்கு முன் கடன் பெற்றபோது எத்தனை சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டதோ, அதையே தொடர்ந்து வசூலிக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது.குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வட்டி குறைப்பு என்பது தானாக அமலுக்கு வருகிறது. மற்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கு வட்டி குறைக்கப்படுவதில்லை;தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.கடிதம் அல்லது அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருகின்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வட்டி குறைக்கப்படுகிறது.கடிதமோ, விண்ணப்பமோ தராத வாடிக்கையாளர்களுக்கு பழைய வட்டி விகிதத்திலேயே மாதாந்திர தவணைத் தொகை வசூலிக்கப்படுகிறது.இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டு கடனுக்கான வட்டி குறைந்தபோது, வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி வட்டியை குறைத்திருந்தால் பலருக்கு வீட்டு கடன் முழுமையாக அடைந்து இருக்கும் அல்லது தவணை தொகை வெகுவாக குறைந்திருக்கும்.பலருக்கு 20, 25 மாதங்களுக்கு முன்னதாகவே கடன் அடைந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, வங்கிகள் வட்டாரத்தில் கேட்டபோது, 'வீட்டு கடன் வட்டி குறைப்பு தொடர்பாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதுகுறித்த விபரங்கள் இணையதளங்களில் உள்ளது.எனவே, வாடிக்கையாளர்களை அழைத்து நேரடியாக சொல்ல வேண்டிய அவசியம் எழவில்லை. வாடிக்கையாளர்கள் கடிதமோ, விண்ணப்பமோ அளித்தால் வட்டி விகிதம் குறைத்து கணக்கிடப்படும்' என தெரிவித்தனர்.சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'வங்கி அதிகாரிகள் கூறுவது சட்டப்படி சரியாக இருந்தாலும், வட்டி குறைப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் கூற வேண்டிய கடமையும், சமூக பொறுப்பும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ளது' என்றனர்.ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும்போது, வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வட்டியை உயர்த்தி வசூலிக்கும் வங்கிகள், அதே வேகத்தை வட்டி குறைப்பிலும் காட்ட வேண்டும்.வாடிக்கையாளர்கள் அனைவரின் மொபைல் எண், இ-மெயில் முகவரி, ஆதார் உள்ளிட்ட விபரங்கள் வங்கிகளிடம் உள்ளன. இதை பயன்படுத்தி, வட்டி குறையும்போது தகவல் தெரிவிப்பதற்கும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வங்கிகளில் இருந்தும், பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறுபவர்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே வட்டியை உடனுக்குடன் குறைக்க முடியும்.வட்டி குறைப்பிற்கு வங்கியை அணுகலாம்

வங்கியில் கடன் பெற்று தவணைத் தொகையை செலுத்தி கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் எவ்வளவு, தற்போது உள்ள வட்டி விகிதம் எவ்வளவு, எத்தனை சதவீதம் குறைத்துள்ளனர், செலுத்தும் தவணைத் தொகை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.பின், வட்டி குறைப்புக்கு, தாங்கள் கடன் பெற்ற வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X