இந்தியா

'நீட்' தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரைக்கால்; புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வுக்கு, காரைக்காலில் இருந்து இயக்கப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ்களில் ஒன்று நடு வழியில் பழுதானதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டதால், மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்தை அடைந்தனர்.கொரோனா பரவல் காரணமாக பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு, நேற்று நாடு முழுதும் நடைபெற்றது.காரைக்காலில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படாததால், இம்மாவட்ட மாணவர்கள் புதுச்சேரி மையத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வுக்கு புதுச்சேரி செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, நீட் தேர்வு எழுதும் 250 மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக, பி.ஆர்.டி.சி., சார்பில் 10 பஸ்கள் மற்றும் 2 வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த வாகனங்களில், காலை 7.10 மணியளவில், புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மாணவர்களை கலெக்டர் அர்ஜூன் சர்மா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். சீனியர் எஸ்.பி., நிஹாரிகா பட் உடனிருந்தார் .மாணவர்களுக்கு சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.அதில், 37 மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு பஸ் (பிஒய்01 பிவி6721), புறப்பட்ட 20 நிமிடத்தில், பிரேக் பிடிக்கும் ஏர் குழாயில் கசிவு ஏற்பட்டதால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.காரைக்காலில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள தரங்கம்பாடியில், காலை 7:30 மணிக்கு பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த மாணவர்கள், தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியுமா என தவித்தனர். காரைக்காலில் இருந்து உடனடியாக மாற்று பஸ் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பயணிகளுடன் வந்த பி.ஆர்.டி.சி. பஸ், தரங்கம்பாடியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டனர். அந்த பஸ்சில், மாணவர்கள் ஏற்றப்பட்டு, 8:35 மணிக்கு புறப்பட்டது. பழுதான பி.ஆர்.டி.சி. பஸ் சரி செய்யப்பட்டு, பயணிகளுடன் காரைக்கால் சென்றது.மாணவர்களுடன் சென்ற பி.ஆர்.டி.சி. பஸ் காலை 11:20 மணிக்கு, மூலக்குளம் தனியார் கல்லுாரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை அடைந்தது. மாணவர்கள் தேர்வு எழுதிய பின், மாலை அதே பஸ்சில் புறப்பட்டு காரைக்கால் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X