பொது செய்தி

இந்தியா

டிக்கெட் பரிசோதகர் முதல் கிரிக்கெட் 'கேப்டன்' வரை

Added : செப் 14, 2020
Share
Advertisement
Dhoni, MS Dhoni, Mahendra Singh Dhoni, Indian cricketer

முந்தைய தலைமுறையினருக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் என்றால், நினைவுக்கு வரும் பெயர், சச்சின் டெண்டுல்கர். ஆனால், இந்த தலைமுறை இளைஞர்கள் மனதில், ஆணி அடித்தது போல் உறைந்திருக்கும் பெயர்: எம்.எஸ்.தோனி.

மகேந்திர சிங் தோனி, 1981 ஜூலை, 7ம் தேதி, ஜார்க்கண்டில் பிறந்தார். எனினும், அவரின் பூர்வீகம், உத்தரகண்ட் மாநிலம். தோனியின் தந்தை பான் சிங், 'மெகான்' என்ற பொதுத் துறை நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரின் தாய், தேவகி தேவி. தோனிக்கு, ஜெயந்தி குப்தா என்ற சகோதரியும், நரேந்திர சிங் தோனி என்ற ஒரு சகோதரரும் உள்ளனர்.


கோப்பை


ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பள்ளிப் படிப்பை பயின்ற தோனி, பேட்மின்டன் மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கினார். மேலும், 10ம் வகுப்புக்குப் பின், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த துவங்கிய தோனி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்டின் ரசிகராக இருந்தார். 12ம் வகுப்பு வரை, பள்ளி மற்றும், 'கிளப்' கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே, தோனி பங்கேற்று வந்தார்.

இதையடுத்து, பீஹார், ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் அணிகளுக்கு தேர்வான தோனி, ரஞ்சி கோப்பை தொடர்களில் பங்கேற்று, தன் திறமையை வெளிபடுத்தினார். கடந்த, 2001 முதல், 2003 வரை, மேற்கு வங்கத்தின் கராக்பூர் ரயில் நிலையத்தில், டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றினார். இந்திய ரயில்வேயில் பணியாற்றிய தோனி, மிகவும் நேர்மையாக பணியாற்றி வந்ததாக, அவருடன் பணியாற்றியோர், இன்றும் நினைவுகூர்கின்றனர்.

கடந்த, 2004ம் ஆண்டு, இந்திய அணிக்கு தேர்வான தோனி, ஒருநாள் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். ஒரு ஆண்டுக்குள், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட துவங்கிய தோனி, 2007ம் ஆண்டு, ராகுல் டிராவிடுக்குப் பின், இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். தோனியின் தலைமையின் கீழ், 2007ல் டி - 20 உலகக் கோப்பை, 2011ல் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஷிப் கோப்பை என, மூன்று கோப்பைகளையும் இந்தியா வென்றது. இந்த மூன்று கோப்பைகளையும் வென்ற, ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் தோனி.

ஒருநாள் போட்டி களில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்; அடுத்தடுத்த போட்டிகளில், தொடர் வெற்றியை கண்டவர் என, அவரின் சாதனைகள் பல. ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில், முதல் இடத்திற்கு இந்திய அணியை கொண்டு சேர்த்த பெருமை, தோனிக்கே உரித்தானது. தோனியை கவுரவிக்கும் விதமாக, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ராஜிவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட, நாட்டின் உயரிய விருதுகள், அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.


சாதனை


இதைத்தவிர, கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி, தோனி கவுரவிக்கப்பட்டார். கபில் தேவுக்குப் பின், ராணுவத்தின் இந்த கவுரவத்தை பெற்ற, இரண்டாவது கிரிக்கெட் வீரர், தோனி. இப்படி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, கடந்த ஆகஸ்ட், 15ல் அறிவித்தார்.இந்த அறிவிப்பு, தோனியின் ரசிகர்களை சோகத்தில் மூழ்கவைத்துள்ளது.

தோனியின் வாழ்க்கை, 2016ல் சினிமா படமாக வெளியிடப்பட்டது. இந்தியா , 2011 உலகக் கோப்பையை கைப்பற்றியது வரை எடுக்கப்பட்ட அந்த படத்தில், மறைந்த, 'பாலிவுட்' நடிகர் சுஷாந்த் சிங், தோனியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X