புதுடில்லி: ஹிந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பல நூற்றாண்டுகளாக நாட்டை ஒருங்கிணைப்பதில் ஹிந்தி மொழி முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
1949ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, ஹிந்தி மொழி, அலுவல் மொழியாக அந்தஸ்து பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வீடியோ வடிவிலான வாழ்த்துச் செய்தியில் பேசியதாவது: ஹிந்தியின் பலமானது எளிமை, எளிதில் புரிந்துகொள்ளுதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றில் உள்ளது. அதனால்தான் 1949ல் இது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஹிந்தி மொழி விளங்குகிறது. வேறு எந்த மொழிகளுடனும் ஹிந்தி போட்டியிடவில்லை.

பல நூற்றாண்டுகளாக நாட்டை ஒருங்கிணைப்பதில் இம்மொழி முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு நாடு அதன் புவியியல் அமைப்பு மற்றும் எல்லைகளால் அடையாளம் காணப்படுகிறது. ஆனால் அதன் மிகப்பெரிய அடையாளம் மொழி. இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இவை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் வலிமைக்கும் காரணமாக இருக்கின்றன. மத்திய அரசு அலுவலகங்களில் மற்ற மொழிகளோடு ஹிந்தியையும் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும். அனைத்து மக்களும் தங்கள் தாய்மொழியோடு ஹிந்தியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE