புதுடில்லி; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனக்கு விதிக்கபட்ட 1 ரூபாய் அபராதத்தை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இன்று(செப்.,14) செலுத்தினார். ''அபராதம் செலுத்தியதற்காக, தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக கருதக் கூடாது,'' என, அவர் கூறியுள்ளார்.
விமர்சனம்:
டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 'இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி' என, அறிவித்த நீதிமன்றம், மன்னிப்பு கேட்டால், அவரை விடுவிப்பதாக உத்தரவிட்டது.
பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதையடுத்து, அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். செப்., 15க்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும் விதிக்கப்படும் என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், அபராத தொகையான 1 ரூபாயை, பிரசாந்த் பூஷன் இன்று செலுத்தினார்.

சீராய்வு மனு:
இது குறித்து பிரசாந்த் பூஷன் கூறியதாவது: அபராதத்தை செலுத்தி விட்டதால், எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை, நான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கற்பிக்க கூடாது. இந்த வழக்கில் எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வேன். எதிர்ப்பு குரல்களை மவுனமாக்க, அரசு எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE