தமிழ்நாடு

55 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீட்பு மகிழ்ச்சி கடலில் காசிமேடு மக்கள்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 55 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீட்பு மகிழ்ச்சி கடலில் காசிமேடு மக்கள்

காசிமேடு:கடலில் மாயமான காசிமேடு மீனவர்கள், 55 நாட்களுக்கு பின், மியான்மர் நாட்டு கடற்படையால் மீட்கப்பட்ட சம்பவம், மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காசிமேடு, நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த, ஒன்பது மீனவர்கள், ஜூலை, 23ம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.ஆக., 7ம் தேதி கரைக்கு திரும்ப வேண்டியவர்கள் வராததால், அவர்களது குடும்பத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனரகத்திலும், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திலும், புகார் அளித்தனர்.

இதையடுத்து, அவர்களை தேடும் பணி, தீவிரமாக நடந்தது.இந்நிலையில், 55 நாட்களுக்கு பின், ஒன்பது மீனவர்களும், மியான்மர் நாட்டு கடற்படையினரால், நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.இது குறித்து, விசைப்படகு உரிமையாளர் பாலாஜி கூறியதாவது:எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே, இன்ஜின் பழுதடைந்து, விசைப்படகு நின்று விடவே, ஒயர்லெஸ் மூலம், அருகிலுள்ள திசைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், யாரும் உதவ முன் வராததால், விசைப்படகு காற்றின் வேகத்தால், மெல்ல மெல்ல அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த, 55 நாட்களாக, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்ற படகு, 3,000 கி.மீ.,க்கு அடுத்து உள்ள, மியான்மர் நாட்டின் எல்லையில், நேற்று அதிகாலை சென்றது.அங்கு ரோந்து பணியில் இருந்த, மியான்மர் நாட்டு கடற்படையினர், ஒன்பது பேரையும் பத்திரமாக மீட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.மியான்மர் நாட்டின் துாதரகத்தில் இருந்து, இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக மீன்வளத் துறையினர், அனைத்து மீனவர்களையும் அழைத்து வரும் பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த, 55 நாட்களுக்கு பின், ஒன்பது மீனவர்களும், அண்டை நாட்டில் மீட்கப்பட்ட சம்பவம், மீனவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'விரைவில் வீடு திரும்புவர்' மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மீன்வளத் துறை, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படை மற்றும் சென்னை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகள் மூலம், காணாமல் போன மீனவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், இந்திய வெளியுறவுத் துறை வழியாக மியான்மர், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து கடல் பகுதியிலும், மீனவர்களை தேடும் பணிகள் நடந்தன.

இந்நிலையில், மியான்மர் நாட்டு கடற்படையினரால், ஒன்பது மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, அங்குள்ள இந்திய துாதரகம் வழியாக, தகவல் பெறப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மீனவர்கள், விரைவில் தமிழகம் திரும்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவர், அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-செப்-202014:27:19 IST Report Abuse
தமிழ்வேல் மீன்வளத் துறை, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படை இவைகள் அனைத்தும் இருந்து, 55 நாட்களாக கண்டுபிடிக்க வில்லை என்பது ஏமாற்றம் அளிக்கின்றது. கைவிட்டதுதான் காரணம். அவர்களுக்கு ஆயுள் கெட்டி அவ்வளவே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X