தமிழ்நாடு

பூட்டு நகரம் எனும் புண்ணிய பூமி; இன்று திண்டுக்கல் மாவட்டம் பிறந்த நாள்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 பூட்டு நகரம் எனும் புண்ணிய பூமி;  இன்று திண்டுக்கல் மாவட்டம் பிறந்த நாள்

மனித வாழ்வு பல உணர்ச்சிகளை உள்ளடக்கியது. அதில் மண்ணின் மீதான பாசம் அலாதியானது. விழுதுகள் பல வந்தபின்பும், வேர் ஊன்றிய மண்ணோடு நமக்கு எப்போதும் ஒரு பிணைப்பு இருக்கும். அத்தகைய திண்டுக்கல் மாவட்டமாக மலர்ந்து 35வது ஆண்டில் இன்று (செப்.15) அடியெடுத்து வைப்பது நமக்கெல்லாம் பெருமைதானே.


மாவட்டமான கதை


மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து உருவானது திண்டுக்கல் மாவட்டம். 1985 செப்.15 ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. துவக்க விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர்., நேரில் பங்கேற்றார். திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்துார், நத்தம், ஒட்டன்சத்திரம் தாலுக்காக்களுடன் உருவானது. தற்போது குஜிலியம்பாறையும் சேர்ந்து 10 தாலுகாக்கள் உள்ளன.

'அண்ணாத்துரை' பெயரில் துவங்கப்பட்ட திண்டுக்கல் 1986 ல் 'காயிதே மில்லத்' மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின் 1996 ல் 'மன்னர் திருமலை நாயக்கர்' மாவட்டம் என மாற்றம் பெற்றது. 1997 ஜூலையில் இருந்து 'திண்டுக்கல்' மாவட்டம் என பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது.


வளர்ச்சிப்பாதையில் மாவட்டம்


மாவட்டத்தை பிரித்ததால் மக்கள் பல வகைகளில் பயன்பெற்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு கொடுக்க கடை கோடியில் இருந்து மதுரை சென்று வந்த நிலை மாறியது. திண்டுக்கல்லிலேயே கலெக்டர், எஸ்.பி., உட்பட ஒரே வளாகத்திற்குள் மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளும் இருப்பது வசதியாக உள்ளது.

மதுரை மாவட்ட பகுதியாக திண்டுக்கல் இருந்த போது முழுக் கவனம் செலுத்த முடியாத நிலையில் அதிகாரிகள் இருந்தனர். பிரிவினைக்கு பின் கல்வி, வேளாண், மருத்துவம் என பல துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளதை மார்தட்டி சொல்லலாம்.


இதுவரை 23 கலெக்டர்கள்


வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்கள், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்கள், தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்கள், மேற்கில் திருப்பூர் மற்றும் கேரளா மாநிலம் எல்லைகளாக உள்ளன. திண்டுக்கல் முதல் கலெக்டர் மாதவன் நம்பியார். தற்போதைய கலெக்டர் விஜயலட்சுமி. இவருடன் சேர்த்து இதுவரை 23 கலெக்டர்கள் திண்டுக்கல்லில் பணியாற்றி இருக்கின்றனர்.

மாவட்டத்தில் 1886 நவ.1 ல் தோன்றிய திண்டுக்கல் நகராட்சி 2014 பிப்.19 ல் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. நகராட்சிகள் (3): பழநி, கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம்.


ஒன்றியங்கள் (14):


திண்டுக்கல், சாணார்பட்டி, ஆத்துார், ரெட்டியார்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்துார், வடமதுரை, பழநி, கொடைக்கானல்.


பேரூராட்சிகள் (23):


தாடிக்கொம்பு, அகரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, சின்னாளப்பட்டி, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், நத்தம், அம்மையநாயக்கனுார், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகன்பட்டி, பண்ணைக்காடு, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனுார், வடமதுரை, அய்யலுார், வேடசந்துார், எரியோடு, பாளையம். ஊராட்சிகளின் எண்ணிக்கை 306.திண்டுக்கல் மலைக்கோட்டை ஆங்கிலேயர், திப்பு சுல்தான், ராணி மங்கம்மாள் உள்ளிட்ட பலருக்கும் கோட்டையாக விளங்கியது. இது தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பூட்டு நகரம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் சிறிய பூட்டு முதல் மெகா சைஸ் பூட்டுக்கள் வரை இன்றும் தரமாக தயாரிக்கப்படுகிறது.மேற்கு மலைத் தொடரில் மலைகளின் இளவரசி கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு வானியியற்பியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஆன்மிக நகர் பழநிக்கு வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தின் அதிக வருவாய் கோயில்களில் பழநியும் ஒன்று. வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் இம்மாவட்டத்தில் தாண்டிக்குடியில் காபி, வாகரையில் மக்காச்சோளம், வேடசந்துாரில் புகையிலை ஆராய்ச்சி நிலையமும் உள்ளது.அனுமன் இலங்கைக்கு துாக்கி சென்ற சஞ்சீவி மலையில் இருந்து சிதறிய சிறு துண்டு தான் இங்குள்ள சிறுமலை என்பது ஐதீகம். இங்கு விளையும் மலை வாழை மருத்துவ குணம் கொண்டது.

பிற மாநிலங்களுக்கும் காய்கறிகளை அனுப்பும் மிகப்பெரிய மார்க்கெட் ஒட்டன்சத்திரம், பெண்கள் அதிகம் விரும்பும் சுங்குடி சேலைகளின் நகரமான சின்னாளபட்டி இங்குதான் உள்ளது.பிரியாணி என்றாலே திண்டுக்கல் என்ற பெருமையும் இதற்குண்டு. இதேபோல பூட்டு, சிறுமலை வாழை, பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு என இங்குள்ள 4 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றது மேலும் சிறப்பு. இன்னும் பல பெருமைகள் வந்து சேர மண்ணின் மைந்தர்களும், மாவட்ட நிர்வாகமும்தான் இணைந்து செயல்பட வேண்டும். புண்ணிய பூமியை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல உறுதி எடுக்க வேண்டும்.


கல்வி, சுற்றுலாவில் முன்னேற்றம்


மினி கொடைக்கானல் எனப்படும் சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.2.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. திருப்பதியை போல் பழநியை மாற்ற ரூ.58 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, லட்சக்கணக்கில் பயணிகள் எளிதாக வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவ கல்லுாரி அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. வறட்சியில்லாத மாவட்டமாக்க ரூ.34.35 கோடியில் நீர் நிலைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா என அனைத்திலும் திண்டுக்கல் மாவட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது.விஜயலட்சுமி, கலெக்டர்


திட்டங்கள் தேவை


போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் தேவை. பிற மாவட்டங்களை போல் பஸ்ஸ்டாண்டை 2, 3 ஆக விரிவுப்படுத்த வேண்டும். திண்டுக்கல்லில் பாஸ்போர்ட் சேவை மையம், தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை தேவை. நலிவடைந்து வரும் பூட்டு, இரும்பு பெட்டி தயாரிப்பு தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை, ரோடு, தெருவிளக்கு என அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நெருக்கடியில் தவிக்கும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு இட வசதி தேவை. நிலக்கோட்டையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, உணவு பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் தேவை. மருத்துவக்கல்லுாரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.கிருபாகரன், தொழில் வர்த்தகர் சங்க மாவட்ட தலைவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X