தமிழ்நாடு

ஊக்குவிப்பு! 'ஊட்டச்சத்து உணவே, ஆயுள் காக்கும் மருந்து'

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020
Share
Advertisement
 ஊக்குவிப்பு! 'ஊட்டச்சத்து உணவே, ஆயுள் காக்கும் மருந்து'

திருப்பூர்:'ஊட்டச்சத்து உணவே, ஆயுள் காக்கும் மருந்து', என்ற நிலையில் வீட்டுத்தோட்டம் அமைக்க, ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின், 'போஷன் மா' திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், தேசிய சுகாதாரப்பணி, துாய்மை இந்தியா, கல்வி, தோட்டக்கலை மற்றும் பொது சுகாதார துறையினரை இணைத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் கீழ், அனைத்து வயது, அனைத்து தரப்பு மக்களும், ஊட்டச்சத்து உணவு உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது;வீடுகளில் உள்ள காலியிடத்தில், தோட்டம் அமைத்து, இயற்கை முறையில், காய்கறி, கீரை பயிரிட்டு, அவற்றை உட்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்த முடியும். அச்சுறுத்தும் கொரோனாவை வெல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், ஊட்டச்சத்து உணவு உட்கொள்ள வேண்டும்; அவற்றை இயன்றளவு வீடுகளில், தயாரித்துக் கொள்ள வேண்டும். வீட்டு தோட்டம் அமைக்கும் திட்டத்தை, சமுதாய இயக்கமாக மாற்றவேண்டும் என்பதே, மத்திய அரசின் வழிகாட்டுதலாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பாலருக்கு பாடம்பல்லடம் வட்டார அங்கன்வாடி மையத்தினர், பரமபதம் விளையாட்டு மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊட்டச்சத்து அதிகமுள்ள காய்கறி, பழம், கீரை, தானியம் மற்றும் ஊட்டச்சத்து குறைந்த 'பாஸ்ட் புட்' உணவு வகை அனைத்தும், பரமபத வரைபடத்தில் இடம் பெற்றிருந்தன.
தாயக்கட்டை பயன்படுத்தி விளையாடும் போது, ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் உள்ள கட்டத்தில், விழும்போது, ஏணியில் ஏறுவது போன்றும், ஊட்டச்சத்து குறைந்த உணவு பொருள் உள்ள கட்டத்தில் விழும்போது, கீழ் இறங்குவதுமாக குழந்தைகள் விளையாடினர்.'குழந்தைகளுடன், அவர்களது பெற்றோரும் விளையாடும் போது, அவர்கள் மனதில், ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஆழமாக பதிகிறது' என, அங்கன்வாடி ஊழியர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X