பொது செய்தி

தமிழ்நாடு

ஜோதி நகர் நட்சத்திர பூங்காவில் பேசும் மரங்கள்! ஒத்துழைப்பால் செழிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
ஜோதி நகர் நட்சத்திர பூங்காவில் பேசும் மரங்கள்! ஒத்துழைப்பால் செழிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி நட்சத்திர பூங்காவில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட, 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் வளர்ந்து, சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடமாகவும் மாறியுள்ளதால், மனதுக்கு நிம்மதி அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.நகராட்சி பூங்காக்கள் பெயரளவுக்கு இரண்டு விளையாட்டு உபகரணங்களுடன், புதர் மண்டி பராமரிப்பின்றி காணப்படும்.
இந்த அடையாளத்தில் இருந்து வேறுபட்டு, பூங்காவுக்கான அம்சங்களுடன், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றி முறையாக பராமரித்து வருகிறது பொள்ளாச்சி நகராட்சி.நகராட்சியில் உள்ள பூங்கா இடங்கள் கண்டறியப்பட்டு, அவை பராமரிக்கப்படுகிறது. பூங்காக்களில், காய்கறி தோட்டம் அமைத்து, விளையும் காய்கறிகளை விற்பனை செய்து, அந்த தொகையை துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு பூங்காவிலும் ஒவ்வொரு திட்டம் என செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டதுடன், தன்னார்வலர்களுடன் இணைந்து பூங்காக்களில் மரக்கன்று வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பசுமைப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அதில், பொள்ளாச்சி நட்சத்திர பூங்காவில் ஒரு பகுதியில் காய்கறி சாகுபடி செய்தாலும், மற்றொரு பகுதியில் நட்சத்திரங்களுக்கு ஏற்ற வகையில், நடவு செய்த மரங்கள் வளர்ந்து அழகாய் காட்சியளிக்கின்றன.
பொள்ளாச்சி ஜோதி நகரில் அமைந்துள்ள நட்சத்திர பூங்கா பெயருக்கேற்ப, 27 நட்சத்திரங்களுக்கான, 66 மரக்கன்றுகள் நடும் திட்டம் கடந்த, 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது.ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான மரத்தின் பெயர் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. நெல்லி, அத்தி, அரசு, வில்வம், புன்னை, நெல்லி, வேம்பு, அரளி என பல்வேறு விதமான மரக்கன்றுகள் நடப்பட்டன. துாய்மை பணியாளர்களால், தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டது. இதனால், மரக்கன்றுகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துள்ளன.ஒவ்வொரு மரமும் சிறப்பு பெற்ற மூலிகை குணம் கொண்டவையாக உள்ளன. அழகாய் பூத்து குலுங்கும் பூக்களும், நெல்லி மரத்தில் கொத்து கொத்தாக நெல்லிக்காய்களும் பார்வையாளர்களை கவர்கின்றன.மக்கள் கூறுகையில், 'நட்சத்திர பூங்காவில் ஒவ்வொரு மரங்களும் மனதை வசீகரம் செய்கிறது.
மரங்கள் நம்மிடம் பேசுவது போன்று உள்ளது. மனதுக்கு சோர்வாக இருந்தால், பூங்காவுக்கு வந்து மர நிழலில் அமர்ந்து, இயற்கையான காற்றை சுவாசித்தால், நிம்மதி கிடைக்கிறது.மேலும், மரங்கள் வளர்ந்து செழிப்பாக உள்ளதால், பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த பூங்கா சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும், பறவைகளின் வாழ்விடமாகவும் மாறி வருகிறது.இங்கு மரங்களுக்கு நடுவே மீண்டும் காய்கறி தோட்டம் அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. எங்களால் முடிந்த உதவிகளை அளிக்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X