பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைக்கு பேரூட்ட, நுண்ணுாட்ட உரங்கள்: மகசூல் அதிகரிக்க வேளாண் துறை அறிவுரை

Added : செப் 15, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:சரியான முறையில் தென்னைக்கு உரமிட்டால், மகசூல் அதிகரிக்கும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சியில் தென்னை சாகுபடியில், பல்வேறு காரணிகளால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மரம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, 75 - 90 தேங்காய்கள் மட்டுமே மகசூல் கிடைக்கிறது.சரியான உர மேலாண்மையால், ஆண்டுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக, 150 - 200 தேங்காய்கள் வரை அறுவடை செய்யலாம், என, வேளாண் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஒரு வயது தென்னங்கன்றுக்கு தொழு உரம், 10 கிலோ; யூரியா, 325 கிராம்; சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா, 500 கிராம்; வேப்பம் புண்ணாக்கு, 1.5 கிலோ இட வேண்டும்.இரண்டு வயது தென்னங்கன்றுகளுக்கு, இதேபோன்று இரு மடங்கும்; மூன்று வயது மரத்துக்கு மூன்று மடங்கு; நான்கு வயது மரத்துக்கு நான்கு மடங்கு என, உரமிட வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களுக்கு, தொழு உரத்தை மட்டும், 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும்.இந்த உர பரிந்துரை அளவை, இரு சம பங்காக பிரித்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும். மார்கழி, தை (டிசம்பர்- ஜனவரி) மாதங்களில் ஒருமுறையும், ஆனி, ஆடி (ஜூன்- ஜூலை) மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும். இது வரை உரம் கொடுக்காத விவசாயிகள், தற்போது பெய்யும் மழையை பயன்படுத்தி, உரமிடலாம்.
உரமிட்ட, 30 - 45 நாட்கள் கழித்து, தென்னை நுண்ணுாட்ட உரத்தை மரத்துக்கு அரை கிலோ வீதம் இட வேண்டும். மரத்தை சுற்றி ஐந்தடி இடைவெளியில், பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட உரங்களிட்டு, மண்ணை கிளறிவிட்டு உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுக்காய்கள் ஆகிய பிரச்னைகள் குறைந்து, ஆண்டுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக 150 - 200 தேங்காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X