பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யாவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் நீதிபதி கடிதம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை : நடிகர் சூர்யாவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி, தலைமை நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடிதம் அனுப்பி உள்ளார். அதே நேரத்தில், 'நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை' என, முன்னாள் நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு பயத்தால், தமிழகத்தில் மாணவர்கள் சிலர், தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பான மனுக்களை, உச்ச நீதிமன்றமும் ஏற்கவில்லை.
அச்சுறுத்தல் : இந்நிலையில், நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' என, கூறியிருந்தார்.இதையடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அனுப்பிய கடிதம்:நடிகர் சூர்யாவின் அறிக்கையை, நீதிமன்ற அவமதிப்பாக கருதுகிறேன். நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அமைப்பை கீழாகக் கருதியது மட்டுமின்றி, தவறான வடிவத்தில் விமர்சித்துள்ளார்.

இதனால், நீதிமன்றத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதால், சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.அதைத் தொடர்ந்து, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க வேண்டியதில்லை என வேண்டுகோள் விடுத்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாஷா, டி.சுதந்திரம், டி.ஹரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி அனுப்பியுள்ள கடிதம்:உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது போல, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.

நீட் தேர்வு எழுத இருந்த, நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தான், நடிகர் சற்று அதிகமாக எதிர்வினை ஆற்றியுள்ளார். இதை, அவ்வளவு கடுமையாக கருதக்கூடாது.சமூகப் பணிநடிகர் சூர்யாவின் கடிதத்தை முழுமையாக பார்க்க வேண்டும். அவரது அறக்கட்டளை வழியாகச் செய்துள்ள நல்ல சமூகப் பணிகளால், நுாற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வியை முடித்து, வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதனால், பெருந்தன்மையுடன் இதை விட்டு விட வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

சூர்யாவின் கடிதம், நீதிமன்ற அவமதிப்பு தான் என்றாலும், பெருந்தன்மையாக விட்டு விடலாம் என, வழக்கறிஞர்களில் ஒரு தரப்பும், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மற்றொரு தரப்பும் கூறுகின்றனர்.தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்: நடிகர் சூர்யாவின் அறிக்கை கண்டனத்துக்குரியது. அதை, வாபஸ் பெற வேண்டும். நீதிமன்ற செயல்பாடு குறித்து விமர்சிப்பது, அவரது வேலை அல்ல.

வைரஸ் அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலையிலும், தினசரி விசாரணை நடத்தி, உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கிறது. சட்டப்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X