உடுமலை:பூளவாடி கிளை நுாலகத்தில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாசகர்கள் அதிருப்தியில், உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடியில், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவின், கீழ், கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது.
கடந்த, 2013ல், கிளை நுாலகம், முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, நுாலகம் செயல்படுகிறது.நுாலகம் தரம் உயர்த்தப்பட்டாலும், கட்டமைப்பு வசதிகள், போதியளவு மேம்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நுாலகத்தில், தற்போது, 35 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மேலும், 2,500க்கும் அதிகமான உறுப்பினர்களும், நுாறு புரவலர்கள் வரை உள்ளனர்.சுற்றுப்பகுதியிலுள்ள, 15க்கும் அதிகமான கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராக இந்த நுாலகத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு செல்லும் இளைஞர்களுக்கு, தனியாக அமர்ந்து, குறிப்பு எடுக்கவும், படிக்கவும் இடமில்லை.இரண்டு அடுக்குகள் மட்டும் இருப்பதால், புத்தகங்களை அடுக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. வாசகர்கள் தொடர் கோரிக்கை அடிப்படையில், அருகில், காலியாக உள்ள இடத்தில், கூடுதல் கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு, பொதுப்பணித்துறை மூலம், பொது நுாலக இயக்குனருக்கு, அனுப்பப்பட்டது.பல ஆண்டுகளாகியும், இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழு நேர நுாலகத்தில், 4 பேர் மட்டும், அமர்ந்து படிக்கும் அவல நிலை தொடர்கிறது.
வாசகர்கள் கூறியதாவது:பூளவாடி நுாலகத்தில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவர். தற்போது, புத்தகங்களை தேடி எடுக்கக்கூட, இடவசதியில்லாமல், பாதிக்கப்பட்டுள்ளோம்.அரசு, அனைத்து நுாலகங்களுக்கும், கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர் வழங்கியுள்ளது. இவற்றை, பொருத்தி பயன்படுத்தவும், இந்நுாலகத்தில், இடமில்லை. கழிப்பிடம், குடிநீர் வசதியும் இல்லை. கூடுதல் கட்டடம் உட்பட கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மாவட்ட நுாலக ஆணைக்குழு மூலம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, வாசகர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE