கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளினால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இரண்டாக பிரிந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கான வளர்ச்சிப்பணிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் என மாவட்ட அலுவலங்கள் தற்காலிக அடிப்படையில் அமைக்கப்பட்டு செயல்வடிவம் பெற்றுள்ளன.தொடர்ந்து, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ரிங் ரோடு திட்டமும், மாவட்ட அலுவலகம் அமைக்கும் மெகா திட்டப் பணிகளும் செயலாக்கப்பட்டு வருகின்றன.ஆனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, தமிழகத்தின் விரைவாக வளர்ச்சி பெறும் நகர பகுதிகளில் ஒன்றாக விளங்கும் கள்ளக்குறிச்சி நகராட்சியில், காய்கறி மார்க்கெட் இருப்பது போன்று ஆடு அறுக்கும் கூடத்துடன் கூடிய இறைச்சி மார்க்கெட் தனியாக அமைக்கப்படாமல் உள்ளது.இதனால், பிரதான சாலையோரங்கள் அனைத்திலும், மீன், கோழி, ஆடு, மாட்டிறைச்சிக் கடைகள் அதிகளவில் பெருகத் துவங்கியுள்ளன. அத்துடன் கோவில்களுக்கு அருகே பக்தர்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மந்தைவெளி பகுதியில் தனியார் இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றன.ஞாயிறு, புதன் மற்றும் விடுமுறை நாட்களில் சாலையோரங்களில் தொடர்ச்சியாக இறைச்சி கடைகள் முளைக்கத்துவங்குவதுடன், அதன் கழிவுகள் அனைத்தும் ஆங்காங்கே விட்டுச் செல்லும் நிலையும் நீடித்து வருகின்றன.
ஆடு அறுக்கும் இடமாக சாலையோரங்களையே பயன்படுத்துவதுடன், இறைச்சியை சாலையில் வைத்து விற்பதும், கழிவுநீரை சாலையிலேயே கொட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நகரப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் முகம் சுளிக்கின்ற நிலை உள்ளதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
மாவட்ட தலைநகரமாக உருவெடுத்து, ஓராண்டு நிறைவுபெற உள்ள நிலையில் நகராட்சியில் இறைச்சி மார்க்கெட் அமைப்பதற்கான எந்த ஒரு முகாந்திர பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை.எனவே கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் இறைச்சி விற்பனைக்கான மார்க்கெட் அமைத்து, பொதுமக்கள் நலனில் அக்கறை காட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE