கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் கோவிலுக்கு செல்லும் பாதையை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வருவாய்த் துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் ஆவிக்கார முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகே உள்ள நீர்பிடிப்பு புறம்போக்கு பகுதியை கோவிலுக்குச் செல்லும் வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், இந்த புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பாலகிருஷ்ணன் பெயருக்கு பட்டா வழங்கியுள்ளனர். தற்போது அந்த பாதையை தனது நிலத்துடன் சேர்த்து பாதையை அடைத்துள்ளார்.இதனால் கோவிலுக்குச் செல்ல அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது நிலம் வழியாக பாதை அமைக்கப்பட்டது. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட அந்த பாதை சட்டவிரோதமானது எனக்கூறி வருவாய்த் துறையினர் அடைக்க முயல்கின்றனர்.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், கோவிலுக்குச் செல்வதற்காக அமைத்த புதிய பாதையை அகற்றுவதைத் தடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனுக்கு சட்ட விரோதமாக நீர்பிடிப்பு பகுதியினை பட்டா கொடுத்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12:50 மணிக்கு தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் கச்சிராயபாளையம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.தகவலறிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 1:05 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட கதிர்வேல் உட்பட 40 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE