தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அரசியல் கட்சிகளின் பலத்தை நிரூபிப்பது மட்டுமின்றி, அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய நிகழ்வாகவும் இருந்து வருகிறது.
இன்னும் 8 மாதங்களில் தமிழக சட்டசபைக்கான பதவி காலம் முடிவடைய உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான தாக்கம் இப்போதே பிரதிபலிக்கத் துவங்கி விட்டது. கடந்த சட்டசபை தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது.விழுப்புரம், வானுார் தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.லோக்சபா தேர்தலிலும் விழுப்புரம் தொகுதி மற்றும் செஞ்சி, மயிலம் சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கிய ஆரணி தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. சட்டசபை, லோக்சபா தேர்தல் வெற்றி களிப்பில் இருந்த தி.மு.க.,விற்கு அதிர்ச்சி தருவதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி அமைந்தது.இந்த வெற்றிக்கு பிறகு அமைச்சர் சண்முகத்தின் செல்வாக்கு உயர்ந்தது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார்.தற்போது, அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணிக்கு புதிதாக ஒன்றிய செயலாளர்களும், நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, சட்டசபை தேர்தலுக்கு தன்னை இப்போதே தயார் படுத்திக் கொள்ளத் துவங்கி விட்டது.
தி.மு.க.,வைப் பொருத் தவரை விழுப்புரம் மாவட்டத்தில் அசைக்க முடியாத, மேலிடத்தின் செல்வாக்கோடு வலம் வருபவர் பொன்முடி. விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வினரை உற்சாகப்படுத்தும் வகையில் பொன்முடிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.அடுத்து தி.மு.க.,வில் புதிதாக உருவாக்கப்பட உள்ள மண்டல பதவியிலும் பொன்முடிக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்துகொரோனா நிவாரணம் கொடுத்து கட்சியின் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணியும், சீத்தாபதி சொக்கலிங்கமும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.நடந்து முடிந்த தி.மு.க.,வின் பொதுக்குழுவிற்கு பிறகு கொரோனாவால் முடங்கிய கட்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.இந்தமுறை தேர்தலின் போது 'வைட்டமின் ப' களம் இறக்கப்படும் என்ற உத்தரவாதத்தை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்து புதுதெம்போடு களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.அத்துடன் காலியாக உள்ள கட்சிப் பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் அறிவிப்பும் விரைவில் வர உள்ளது.
இதன் மூலம் தி.மு.க.,வும் சட்டசபை தேர்தலில் தனது பலத்தைக் காட்ட இப்போது முண்டாசு கட்டத் துவங்கி விட்டது. இரு கட்சிகளும் தேர்தலுக்கு வியூகம் அமைத்து களம் இறங்கி இருப்பதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் அதற்குள்ளாகவே தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கட்சிகளுடன் இணையும் கூட்டணி கட்சிகளின் பலத்தைப் பொறுத்து விழுப்புரம் மாவட்டத்தின்தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.வி.ஐ.பி., தொகுதியாக விக்கிரவாண்டி கடந்த 2 தேர்தல்களில் அமைச்சர் சண்முகம் விழுப்புரத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு வரை தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதியாக விழுப்புரம் இருந்தது. விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு டென்ஷனான தொகுதி என்பதால் இந்த முறை அமைச்சர் சண்முகம் விக்கிரவாண்டிதொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
இவரது முயற்சியால் வெகு சீக்கிரத்தில் விக்கிரவாண்டியில் தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. புதிதாக நீதிமன்றம் திறக்கப்பட்டது. மிக விரைவில் கருவூலம், தீயணைப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள பனமலை ஏரியில் முடிவடையும் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு 28 கோடி ரூபாயும், வீடூர் அணையை துார்வார 43 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதி இப்போதே வி.ஐ.பி., அந்தஸ்தை பெற்று விட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE