தமிழ்நாடு

150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'மஞ்சள் மாநகர்': சங்க, புராண காலங்கள், இலக்கியங்களிலும் இடம் பிடித்த 'ஈரோடு'

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: உலக அளவில் மஞ்சளுக்கு பெயரெடுத்து, மஞ்சள் மாநகர் என்று பெயர் பெற்ற, நம்ம ஊரு ஈரோடு, 150வது ஆண்டில், நாளை அடியெடுத்து வைக்கிறது.


இதுகுறித்து ஈரோடு கொங்கு ஆய்வு மைய, புலவர் ராசு கூறியதாவது: ஈரோடு மாநகர வளர்ச்சிக்கு கால்கோள் செய்யப்பட்ட நாள், 16.9.1871. அன்று, கோவை கலெக்டர் மெக்ரிக்கர் தலைமையில், ஏழு நியமன உறுப்பினர் கொண்ட 'ஈரோடு நகர பரிபாலன சாலை' நியமிக்கப்பட்டது. வடகொங்கு பகுதியில், பண்டைய பூந்துறை நாட்டு பிரிவில் உள்ள, 32 தொன்மையான ஊர்களில், 24வது ஊராக ஈரோடு விளங்கியது. 1799 ஜூலை, 17 முதல், 1804 நவ.,23 வரை, நொய்யல் வடக்கு மாவட்டத்தில் ஓர் ஊராக, ஈரோடு விளங்கியது. 1804 நவ.,24 முதல் பெருந்துறை தாலுகாவில், ஒரு கிராமமாக இருந்து, 1868ல் ஈரோடு தாலுகா உதயமானது. தொல்பொருள் சான்றுகள் மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மக்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது. சேலம்-திருச்சி-ரயில் பாதைப்பிரிவு இடம், பவர் ஹவுஸ் உள்ள மாசன உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான வடக்கு மூலை, கைக்கோளன் தோட்டம், எஸ்.கே.சென்னியப்ப கவுண்டர் ரோடு, பெரியண்ண கவுண்டர் ரோடு, கலைமகள் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில், இதற்கான பழமையான சான்று கிடைத்துள்ளது. பெரும்பள்ளம்-பிச்சைக்காரன் பள்ளம் என்ற, இரு ஓடைக்கு இடையில் இருந்ததால் ஈரோடை எனப்பட்டது. சங்க காலத்தில், புன்றுநை என்ற வேளியர் ஆட்சி புரிந்தார். பின் இரட்டர், கங்கர், சேரர், சோழர், பாண்டியர், போசளர், விஜயநகரார், உம்மாதூரர், நாயக்கர், ஐதர், திப்பு ஆகியோர் ஈரோட்டு பகுதியில் நிர்வாகம் செய்தனர். இதில் பலருடைய கல்வெட்டு, செப்பேடு, ஓலை ஆவணம் கிடைத்துள்ளது.

மூக்கறுப்பு போரால் துயரம்: ஈரோடு நிர்வாகத்தை தங்கள் வசப்படுத்த பல போர்கள் நடந்துள்ளன. 1628ல் கட்டி முதலி-இராமபய்யன் போர், 1654ல் மைசூர் ஹம்பையன்-நாயக்கர் போர், 1672ல் மைசூர் தொட்ட தேவராயன்-சொக்கலிங்க நாயக்கர் போர், 1768ல் ஐதர்அலி-கம்பெனியர் போர், 1792ல் திப்பு- கம்பெனி போர் நடந்துள்ளது. இதில், மைசூர் ஹம்பையன், தன் கண்ணில் கண்டவர்களின் மூக்கை எல்லாம் அறுத்து, தன் அரசனுக்கு மூட்டை மூட்டையாக அனுப்பினான். இப்போர் மூக்கறுப்பு போர் எனப்பட்டது. இப்போரால் ஈரோடு பட்ட துயர் மிகுதி. 3,000 வீடுகள் இருந்த ஈரோட்டில், 400 வீடுகளே எஞ்சின. ஈரோட்டில் இருந்த பெரிய மண்கோட்டை, 1878ல் பஞ்ச நிவாரண வேலைக்காக இடிக்கப்பட்டது.

பெருமை சேர்க்கும் கோவில்கள்: ஈரோட்டில் மூன்று சிவன் கோவில், மூன்று பெருமாள் கோவில், மூன்று மாரியம்மன் கோவில் இருப்பது சிறப்பானது. முதல் சோழர் கோவில், கோட்டை பள்ளி கொண்ட பெருமாள் கோவிலாகும் (கி.பி.915); பராந்தக சோழன் கட்டியது. முதல் கொங்கு சோழர் மகிமாலய இருக்குவேள் (கி.பி.924) கட்டியது, மகிமாலீசுவரம் கோவில். காவிரிக்கரையில் உள்ள கரிகால சோழீசுவரம் கோவில் கரிகாலன் கட்டியது. கொங்கு அரசர்கள் முடிசூட்டிக் கொள்வது, கோட்டை பெருமாள் கோவிலில், அதனால் அக்கோவில் அபி?ஷக விண்ணகரம் என்பட்டது. கோட்டை சிவாலயம் திருத்தொண்டீசுவர் ஆலயமாகும். அதை ஆருத்திர கபாலீசுவரர் என்று தவறாக அழைக்கிறோம்.

கலைக்கும் பஞ்சமில்லை: கலை இலக்கியம் என எடுத்துக் கொண்டால், 17ம் நூற்றாண்டில் அய்யனாரப்பன் கோவிலில் பள்ளு நாடகம் நடிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் பல இலக்கியம் அச்சானது. ஈரோட்டில் வெளிவந்த இதழ்கள், 50; ஈ.வே.ரா., நடத்திய இதழ்கள், 10; வெளியிட்ட நூல்கள், 185 ஆகும். கல்வியில், 1887ல் தாசப்ப ஐயர், அண்ணாசாமி அய்யங்கார் 'டவுன் ஹைஸ்கூல்' தொடங்கி நடத்த முடியாமல் லண்டன் மிஷனுக்கு விற்றார். அதை மீட்டு ஷேக்தாவூது தந்தை அலாவுதீன் சாகியும், ஈ.வே.ரா.,வின் தந்தை வேங்கடநாயக்கரும், பல சமூகத்தவரை இணைத்து, 1889ல் மகாசன பள்ளியை ஏற்படுத்தினர். 1954ல் மகாசன கல்லூரி தொடங்கி, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாக மாறியது.

நான்கு முறை வந்த காந்தி: இந்திய தலைவர்கள் பலரும் ஈரோடு வந்துள்ளனர். காந்தியடிகள் நான்கு முறை வந்துள்ளார். தமிழ்நாட்டில் முதல் காந்தி சிலை, 1927ல் ஈரோட்டில் நிறுவப்பட்டது. ஈரோட்டில் தற்போது, ஐந்து காந்தி சிலைகள் உள்ளன. 1921 செப்.,25ல் ஈ.வே.ரா., இல்லத்தில் காந்தி தங்கியபோது, ஈ.வே.ரா., தங்கை கண்ணம்பாள், மனைவி நாகம்மையார் கூறியதால், கள்ளுக்கடை மறியல் போர் நாட்டில் ஏற்பட்டது.

சாட்சியாக திகழும் 'கழுமரம்': 1882ல் முதல் ரயில் ஓடியது. கி.பி.948ல் கொல்லம்பாளையத்தில் 'தாழி ஏரி' வெட்டப்பட்டது. 1282ல் காரை வாய்க்கால்-பெரும்பள்ளம் பாலம், காலிங்கராயனால் கட்டப்பட்டது. காங்கிரஸ் கொள்கைகளுக்கு ஏற்ப, பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள வேங்கடப்ப நாயக்கர் சத்திரத்தில், 1922 முதல் 1924 வரை, ஈ.வே.ரா., ஹிந்தி பள்ளி நடத்தினார். பாரதியார், 1921ல் ஈரோடு வந்தார். அதுவே அவரின் கடைசி பயணமாகும், ஈரோடு அய்யனாரப்பன் கோவிலில் கொலை தண்டனை தரும் 'கழுமரம்' இன்றும் உள்ளது. 150 ஆண்டுகளை கடந்து வந்த ஈரோடு, பல வரலாற்று சம்பவங்களை கொண்டிருந்தாலும், ஒரு சில மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோட்டின் பல்வேறு பெயர்கள்: இலக்கியம், புராணத்தில், மயிலை, மறந்தை, உறந்தை, கபாலபுரி, இருங்கோழி என, ஈரோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு ஓடை இடையில் இருந்ததால், நட்ரூர், மத்தியபுரி, திருவரங்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. சோழர்கள் 'மூவேந்தர் சோழ சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிட்டனர். தாமஸ் மன்றோ குறிப்பில், heroad என்றும், கம்பெனி வரைபடத்தில், erodu என்றும், மெக்கன்சி ஆவணத்தில், irodu என்றும் உள்ளது. erode என்பது erodu என மாற்றம் பெற வேண்டும். திப்பு சுல்தான், ஈரோட்டை பேகம்பூர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X