பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா, தமிழகத்தில் ரூ.5,000 கோடி மோசடி: கும்பல் தலைவன் சேலத்தில் சுற்றிவளைப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: கேரளா, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிதி நிறுவனம் என்ற பெயரில், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட கும்பல் தலைவன், சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கேரளா, கோவை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


கோவை, பீளமேடு, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கவுதம் ரமேஷ்,40; தலைமையில், ஒண்டிபுதூரை சேர்ந்த பிரவீன்குமார்,30, உள்ளிட்ட, 15 பேர் சேர்ந்து, 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்' (யு.டி.எஸ்.,) என்னும் நிதி நிதி நிறுவனத்தை துவக்கினர். இந்த நிறுவனத்தில், 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில், மாதம், 10 சதவீத தொகையும், 10 மாதங்கள் முடியும் நிலையில், முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என, கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிட்டனர். அந்த வகையில் லட்சம், கோடிக் கணக்கில் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளிடம் வசூல் செய்து குவித்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், 20 ஆயிரம் பேரிடம், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. தமிழகத்தில் மோசடி மூலம் சுருட்டிய பணத்தை கொண்டு, கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அலுவலகங்களை திறந்தனர். கேரளாவில், மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, ஆலப்புழா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட, அம்மாநிலம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட கிளைகளை ஏற்படுத்தி, 80 ஆயிரம் பேரிடம், 3,800 கோடி வரை வசூல் செய்து, அதை திருப்பி வழங்காமல் மோசடி செய்து விட்டு, இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகி விட்டனர்.


இந்நிலையில், சேலம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மகேஷ்,34, உட்பட, சேலம் மாநகரை சேர்ந்த, 10 பேரிடம், 4.80 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாக, மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமாருக்கு கடந்த ஜூன் மாதம் புகார் வந்தது. அவர் தலைமையில், குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பூபதி ராஜன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சேலம் புது பஸ் ஸ்டாண்டு அருகே, கவுதம் ரமேஷ், பிரவீன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், பிரவீன்குமாருக்கு நோய் தொற்று உறுதியானதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கவுதம் ரமேஷ், ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் சேலத்தில் சிக்கியதை அறிந்த கேரள மாநிலம், மலப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சாம்ஸ், எஸ்.ஐ., ரியாஸ் சக்காரி ஆகியோர், சேலம் வந்து மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மீதுள்ள வழக்குகளுக்கு மேல் விசாரணை நடத்துவதற்காக, தங்களிடம் ஒப்படைக்கும் படி, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சேலம் மாநகர போலீசார், அவர்களை கேரள போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த கேரள போலீசார் மலப்புறம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதே போல், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கவுதம் ரமேஷிடம் விசாரணை நடத்த கஸ்டடி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

குவியுது பாராட்டு: தமிழகம், கேரளாவில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கேரளா, கோவை போலீசார் கடந்த மூன்றாண்டுகளாக தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், அந்த கும்பலை கடந்த ஜூலை முதல் தேடி வந்த போலீசார், இரண்டே மாதத்தில் கண்ணி வைத்து பிடித்துள்ளனர். வெளி மாநில, மாவட்ட போலீசாருக்கு போக்கு காட்டி வந்த கும்பலை கைது செய்த சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் பூபதி ராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரை, கமிஷனர் செந்தில்குமார் மட்டுமின்றி, கேரள மாநில போலீஸ் உயரதிகாரிகளும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X