சேலம் : கேரளா, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிதி நிறுவனம் என்ற பெயரில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த கும்பல் தலைவன், சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கேரளா போலீசார், 'கஸ்டடி'யில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரமேஷ், 40. இவரது தலைமையில், ஒண்டிப்புதுாரைச் சேர்ந்த பிரவீன்குமார், 30, உள்ளிட்ட, 15 பேர் சேர்ந்து, 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்' - யு.டி.எஸ்., - எனும் நிதி நிதிநிறுவனத்தை துவக்கினர்.
கவர்ச்சி அறிவிப்பு
'இந்த நிறுவனத்தில், 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில், மாதம், 10 சதவீத வட்டியும், 10 மாதங்கள் முடியும் நிலையில், முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்' என, கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர்.இதை நம்பி, பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர், நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், 20 ஆயிரம் பேரிடம், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தனர்.தமிழகத்தில் திரட்டிய பணத்தில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட கிளைகளை திறந்து, 80 ஆயிரம் பேரிடம், 3,800 கோடி வரை வசூல் செய்தனர். இந்த பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்து, இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில், சேலம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மகேஷ், 34, உட்பட, சேலம் மாநகரைச் சேர்ந்த, 10 பேரிடம், 4.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஜூன் மாதம் புகார் வந்தது.
மனுத்தாக்கல்
இந்நிலையில், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே பதுங்கியிருந்த, கவுதம் ரமேஷ், பிரவீன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், பிரவீன்குமாருக்கு நோய் தொற்று உறுதியானதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவுதம் ரமேஷ், ஆத்துார் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள், சேலத்தில் சிக்கியதை அறிந்த, கேரள மாநிலம், மலப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சாம்ஸ், எஸ்.ஐ., ரியாஸ் சக்காரி ஆகியோர் சேலம் வந்து, இருவரையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.ஆனால், சேலம் மாநகர போலீசார், அவர்களை கேரள போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த, கேரள போலீசார், மலப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இதேபோல், கோவை போலீசாரும், கவுதம் ரமேஷிடம் விசாரணை நடத்த, 'கஸ்டடி' எடுக்க முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE