பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவம் பற்றிய வதந்தி... மரணத்துக்கு அடிக்கும் தந்தி!

Added : செப் 15, 2020
Share
Advertisement
 மருத்துவம் பற்றிய வதந்தி... மரணத்துக்கு அடிக்கும் தந்தி!

கால் மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடித்தால், கொரோனா தொற்றைத் தடுக்கலாம் என்று, சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரப்பப்பட்டது. கால் மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடித்தால் கொரோனா ஓடாது; சிறுநீரகம் செயலிழந்து கால் வீங்கி விடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்று குடிநீர் என்பதை இயற்கை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. ​எந்த வொரு தொற்றினால் காய்ச்சல் ஏற்பட்டாலும் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பதே இயற்கை மருத்துவத்தின் பரிந்துரை. அதனால், உடலின் வெப்பநிலை சீராகும்; சிறுநீர்க்கழிவு முறையாக வெளியேறும்.ஆனால், எப்போது குடிக்க வேண்டும், எப்போது குடிக்கக்கூடாது, எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர் என்பதுதான் இயற்கையின் நியதி.

பசியின்றி சாப்பிடுவதும், தாகமின்றித் தண்ணீர் குடிப்பதும் தேவையற்ற உபாதைகளுக்கே உரம் போடும் என்பதே இயற்கை மருத்துவர்களின் அறிவுரை.காலையில், பல் துலக்கியதும், ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். உணவுக்கு முன்னும் பின்னும் இடையிலும் தண்ணீர் குடிப்பது தவறு. இது செரிமானத்தைத் தடைசெய்யும். ஒரு நபர் ஒரு நாளுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீரை சிறிது சிறிதாகப் பிரித்துக் குடிக்க வேண்டும்.

கொரோனா உள்ளிட்ட எந்த வகைக் காய்ச்சலானாலும் கூடுதலாக அரை லிட்டர் குடிக்கச் சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.கொரோனா அறிகுறி உள்ளவர்கள்,கால் மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போன்ற வதந்திகளை நம்பி, வீட்டிலேயே தண்ணீர் குடித்துக்கொண்டோ, வேறு மருந்துகளை எடுத்துக் கொண்டோ இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும். அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர்களை அணுகுவது நல்லது

.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மாத்திரமல்ல... தண்ணீரும், மருந்துமே நஞ்சுதான்!


ஓர் ஆதரவு மட்டுமே!

''கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அடிப்படையான அக்குபஞ்சர், அக்குபிரசர் குறித்து பயிற்சி அளிக்கிறோம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிப்பதற்கான ஒரு ஆதரவு நடவடிக்கை மட்டுமே!''-அர்ச்சனா, உதவி மருத்துவஅலுவலர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவு, அரசு தலைமை மருத்துவமனை, பொள்ளாச்சி, தொடர்பு எண்: 99523 20931, இ.மெயில் : tarchanah@gmail.com


உகாய்... உயிர் காக்கும் உப்புநீர்!

தொண்டை நோய்த்தொற்றுகளை நிர்வகிப்பதில் உப்பு நீர் கொப்பளித்தல் ஒரு வீட்டு மருந்தாக உள்ளது. ஜப்பானிய கலாசாரத்தில் இது 'உகாய்' என்று கூறப்படுகிறது. நீர் கொப்பளித்தல் குறித்து குழந்தைகள், வெவ்வேறு வயதினரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சுவாச நோய் தொற்றை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தெரிந்தது. 20- - 25 மில்லி உப்பு நீரை வாயில் எடுத்து, 15 விநாடிகள், தொடர்ச்சியாக மூன்று முறை, ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக, சுவாசக் குழாயில் இருக்கும் சளி, உடலில் நுழையும் பாக்டீரியா, வைரஸை சுவாசத்தின் மூலம் சிக்க வைக்கும் ஒரு பாதுகாப்பு பொறியாக செயல்படுகிறது. ஆனால், அதிகப்படியான சளியும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. உப்பு நீர் நீராவி உள்ளிழுத்தல் அதிகப்படியான சளியை அகற்ற உதவுகிறது.

-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X