''தமிழைப் பிழையின்றி எழுத தெரியாது,'' என, தர்மபுரி லோக்சபா, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் கூறினார்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கை, ஹிந்திக்கு எதிராக, தி.மு.க.,வினர் குரல் கொடுத்து வருகின்றனர். ஐ.பி.எஸ்., பதவியில் இருந்து விலகி, தமிழக, பா.ஜ.,வின் துணை தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணாமலை, தி.மு.க.,விற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், 'டுவிட்டர்' தளத்தில், அண்ணாமலையுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இந்நிலையில், செந்தில்குமாருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவியது.
இது பற்றி, செந்தில்குமார், நமது நிருபரிடம் கூறியதாவது: நான், ஏற்காடு மான்போர்டு பள்ளியில், துவக்கக் கல்வி முதல், மேல்நிலை கல்வி வரை படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, விருப்ப பாடமாக தமிழ் படித்தேன். தொடர்ந்து, பிரெஞ்ச் பாடத்தைப் படித்தேன். அதே நேரத்தில், ஹிந்தியை முழுமையாக எழுத, படிக்க, பேச தெரியாது.தமிழில் பேசும்போது, பிழையின்றி உச்சரிக்க முடியும். ஆனால், துவக்கக் கல்வி முதல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் பள்ளி, கல்லுாரிகளில் படித்ததால், தமிழை முழுமையாக பிழையின்றி எழுத தெரியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

செந்தில்குமார் பள்ளிப் படிப்பை முடித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., படித்து, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ மேற்படிப்பை முடித்துள்ளார்.
இதுபற்றி அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‛தமிழ், தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசிவரும் திமுக, தமிழை எழுத தெரியாத ஒருவரை எம்பி ஆக்கியிருக்கிறது. இவர்களது தமிழ்ப் பற்றின் லட்சணம் இதுதான்,' என்றார்.
- நமது நிருபர் -