பொது செய்தி

தமிழ்நாடு

ஆகவே... வாடிக்கையாளரே தெய்வம்!

Updated : செப் 16, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வங்கிக்கடன், வட்டி, வங்கிகள், வாடிக்கையாளர், தெய்வம்

வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனுக்கு தவணை செலுத்துவது, வட்டி விபரங்கள் தொடர்பாக, ஒரு வாடிக்கையாளருக்கும், ஒரு வங்கி அதிகாரிக்கும் இடையே நடந்த அலைபேசி உரையாடல் ஆடியோ, தமிழகத்தில் பலரின் 'வாட்ஸ் அப்'ல் சுற்றி வருகிறது.'கடன் தருகிறார்களே என்று கைநீட்டி வாங்கிவிடக் கூடாது'. அதை திருப்பி செலுத்துவதிலும், அடிக்கடி மாறிவரும், வட்டி வீதங்களை தெரிந்து கொள்வதிலும், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அதே சமயம், வங்கிகள், வாடிக்கையாளருக்கு உகந்த தகவலையும், சிறந்த சேவையையும் அளிக்க வேண்டும் என்கின்ற தார்மீக பொறுப்புணர்வை போதிக்கும் கருத்தாக, அந்த ஆடியோ அமைந்துள்ளது.


ரூ.80 லட்சம் வட்டி

அதன் சாராம்சம் இது தான்: ஒரு வாடிக்கையாளர், ஒரு வங்கியில், வீட்டுக்கடனாக, 2006ல், ரூ.51 லட்சம் பெற்றுள்ளார். அதன்பின், தவணை தவறாமல், 14 ஆண்டுகளாக திருப்பி செலுத்தி வருகிறார். மாத தவணை, 57 ஆயிரம். அவர், தற்போது செலுத்தும் வட்டி, 14.5 சதவீதம். இதுவரை திரும்ப செலுத்தியுள்ள தொகை, ரூ.94 லட்சம்.அதிர்ந்து போன வாடிக்கையாளருக்கு, இன்னொரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. வீட்டுக்கடனுக்கான வட்டியை, ரிசர்வ் வங்கி, 7.8 சதவீதமாக குறைத்துள்ளதையும் அறிந்து கொள்கிறார். அதுகுறித்தும் வங்கி அதிகாரியிடம் கேட்கிறார். அவர், இன்னொரு குண்டு போடுகிறார். 'அது 7.8 சதவீதம் இல்லீங்க. இன்னும் குறைச்சிட்டாங்க; வெறும் 6.95 சதவீதம் தான்' என்கிறார்.

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வண்டி வண்டியாய் வட்டியை செலுத்தி, விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி வாடிக்கையாளர்களின் மனதின் குரலாய், அந்த ஆடியோ வலம் வருகிறது. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை எந்தளவு என்று தெரியாவிட்டாலும், கடன், அசல், மாறி வரும் வட்டி விகிதங்கள் குறித்த சாரசம்களை விரிவாக பார்ப்போம்.

இந்த உரையாடலில், ரூ.54 லட்சம் கடனுக்கு, 14 லட்சம் தான் கழிந்திருக்கிறது. ஆனால், ரூ.80 லட்சம் வட்டி கட்டி இருப்பதாக சொல்கிறார். இது, வாடிக்கையாளர் தனது கடனுக்கான வட்டி வீதங்கள் மாறியது குறித்து தெரிந்து கொள்ளாமல் இருந்ததும், அதை அனுபவிக்காமல் விட்டதையும் உணர்த்துகிறது. இன்னொரு புறம், வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் காட்டும் 'தர்மம்' என்னவென்றால், வட்டி வீதங்கள், ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது குறைக்கப்படும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது இல்லை. விவரம் அறிந்து, வாடிக்கையாளராக வங்கியை தேடி வந்து கேட்டால் தான், கடிதம் எழுதித்தர சொல்லி, வட்டி விவரங்கள் கூறி குறைக்கப்பட வேண்டுமென்றால் குறைக்கிறார்கள்.


'பிக்சட்' என்ற நிம்மதி

வீட்டு கடன் போன்ற கடன்களை பெறும்போது, வட்டி வீதம் இரண்டு வகையாக கணக்கிடப்படும். ஒன்று, 'பிக்சட் ரேட்' வட்டி. இது, கடன் வாங்கும்போது எவ்வளவு வட்டி நிர்ணயிக்கப்படுகிறதோ, அதுவே, கடன் தொகை திரும்ப செலுத்தி முடியும் வரைக்கும் வசூலிக்கப்படும். இடையில், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி வீதங்கள், கூடுதலாக அல்லது குறைவாக இருந்தாலும் 'பிக்சட் ரேட்'டில் மாற்றம் வராது. அதனால், 'பிக்சட் ரேட்'காரர்கள் எந்த பரபரப்புக்கும் ஆளாக வேண்டியதில்லை.

மற்றொரு வகை, 'ப்ளோட்டிங் ரேட்'. இது, அவ்வப்போது ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி வீதங்களை அடிப்படையாக கொண்டு வசூலிக்கப்படுகிறது. 'ப்ளோட்டிங் ரேட்'டில் வங்கிகளின் எம்.சி.எல்.ஆர்., என்று சொல்லக்கூடிய, 'மார்ஜினல் காஸ்ட் ஆப் பண்ட் லெண்டிங்க் ரேட்' அல்லது இ.பி.எல்.ஆர்., என்று சொல்லக்கூடிய, 'எக்ஸ்டர்னல் பென்ச் மார்க் லெண்டிங்க் ரேட்' என்கிற முறைப்படி, வட்டி விகிதம் அவ்வப்போது மாறுபடும்.'ப்ளோட்டிங் ரேட்'ல் வட்டி அதிகரிக்கும் போது, வங்கிகள் தாமாகவே கூடுதல் வட்டியை பிடித்து விடுகின்றன. குறையும் போது, வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைப்பை தர வேண்டும். ஆனால் தாமாகவே, அதன் பலனை தருவதில், சில வங்கிகளில் சுணக்கம் காணப்படுகிறது.

அரசு வங்கிகளில் இ.எம்.ஐ., கட்டிய அன்றே, அசல் மற்றும் வட்டியில் வரவு வைக்கப்படும். ஆனால், சில தனியார் வங்கிகளில், மாத அல்லது வருட கடைசியில் தான், வட்டி வரவு வைக்கப்படுவதால், அதிக வட்டி செலுத்தும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக வட்டிக்குறைப்பு அல்லது அதிகரிப்பை, இ.எம்.ஐ., தொகையில் மாற்றம் ஏற்படாமல், கடைசியில் செலுத்தப்படும் தவணை எண்களில், சரி செய்து கொள்கின்றனர்.


மாற்ற முடியுமா?


'பிக்சட் ரேட்'டில் கடன் வாங்கும் போது, 12 சதவீதம் இருந்தால், கடன் கட்டி முடியும் வரை, 12 சதவீதம் தான் கட்ட வேண்டும். 'ப்ளோட்டிங் ரேட்'டில் வாங்கும் போது, 12 சதவீதம் இருந்தால், அது 14க்கு உயரும் போது, கூடுதலாக பிடிக்கப்பட்டு விடும். அதுவே, 9 சதவீதத்துக்கு குறைந்தால், குறைத்து கட்டலாம். பலருக்கு, 'பிக்சட் ரேட்' நிம்மதி. சிலருக்கு 'ப்ளோட்டிங் ரேட்' மீது பிரியம். வாங்கிய கடனை பிக்சட் ரேட்டிலிருந்து, ப்ளோட்டிங் ரேட்டிற்கு மாற்ற வேண்டுமென்றால், அதற்கான குறிப்பிட்ட தொகையை கொடுத்து மாற முடியும்.

குறைந்து வரும் வட்டிக்காலங்களில் இது பயனுள்ளதாக இருக்கும்.பொதுவாக, வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பது கிடையாது. வங்கியில் டிபாசிட் போட்டு விட்டால், அது சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறார்கள். அதேபோல, வங்கி சொல்லும் கடன் வசூலிப்பு கணக்குகளும் சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறார்கள். இதைத்தான், 'Buyer beware' என்கிறார்கள்.வங்கியின் நடவடிக்கைகள், வட்டி ஏற்றம், இறக்கங்களை வாடிக்கையாளர்கள் தான் சரிபார்க்க வேண்டும். அதில் விழிப்புணர்வு வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல, வட்டி குறைப்புக்கான சலுகைகள் அறிவிக்கப்படும்போது, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏற்பு கடிதம் வரட்டும் என காத்திருக்காமல், தாங்களாகவே முன்வந்து, வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதை அறிவித்து, வாடிக்கையாளருக்கு உதவும் மனப்பான்மை வங்கிகளுக்கு வரவேண்டும். வட்டி வசூலிக்கும் வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.தவிர, ரிசர்வ் வங்கியும், தனது அதிகாரத்துக்கு கீழே இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

வங்கிகளும், தனது கிளை மேலாளர்கள், மாறி வரும் வட்டி விகிதங்கள் அதன் தாக்கங்கள் குறித்த விபரங்களை முழு அளவில் தெரிந்து வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எல்லா வணிக நிறுவனங்களும், மகாத்மா காந்தி, 1890ல் தென்னாப்பிரிக்காவில் கூறிய ஒரு பொன்மொழியை தான் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அது, 'எங்கள் நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர் மிக முக்கியமானவர். அவர், நம்மை நம்பி இல்லை. நாம் தான் அவரை நம்பி இருக்கிறோம்' என்பதே. ஆகவே, வாடிக்கையாளரே தெய்வம்!

ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்- karthi@gkmtax.com

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் வங்கிகள் மட்டுமல்ல LIC பீட்டுக் கடனிலும் இந்த வட்டி கொள்ளை போக்கு உண்டு
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-செப்-202021:19:12 IST Report Abuse
J.Isaac இந்தியாவில் கடன் வாங்கியவர்கள் அடிமைகள். வங்கித்துறை தனியார் மயமானால் இன்னும் கொடுமை அதிகமாகும். வட்டி கூடினால் மட்டும் கடன் வாங்கியவர்களுக்கு தகவல் தெரிவிக்காமலே அதிகமாக்கி விடுவார்கள். பொறுப்புள்ள நிர்வாகம். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் அடிமை.
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
15-செப்-202016:46:57 IST Report Abuse
N S 'அவர், நம்மை நம்பி இல்லை. நாம் தான் அவரை நம்பி இருக்கிறோம்' .... எங்கோ பார்த்த மாதிரி இருக்கு. இப்பொழுதெல்லாம் வாடிக்கையாளர்கள் ...... ஏண்டா வங்கிக்கு போனோமுன்னு இருக்காங்க. ... எல்லாம் சுய சேவை தான். காவலாளிதான் கருணை கொண்டு உதவினால் உண்டு. .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X