பழநி : பழநி முருகன்கோயில் உண்டியல் எண்ணிக்கை ஏழு மாதங்களுக்கு பின் எண்ணப்பட்டது. முதல் நாளான நேற்று ரூ.91 லட்சத்து 42 ஆயிரம் காணிக்கை கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு மார்ச் 20 முதல் தடை விதிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலானது. இதனால் பக்தர்கள் வருகை இன்றி கோயில் வெறிச்சோடியது. கடைசியாக மார்ச் 20ல் எண்ணப்பட்டது.பழநி கோயிலில் வழக்கமாக மாதம் ஒருமுறை, விழாக்காலங்களில் 2 முறை உண்டியல்களை திறந்து எண்ணுவர். ஊரடங்கு தளர்வுக்குப் பின் 7 மாதங்களுக்குப்பின் நேற்று எண்ணப்பட்டது. முதல்நாளான நேற்று ரூ.91 லட்சத்து 42 ஆயிரத்து 530, தங்கம் 467 கிராம், வெள்ளி 9020 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 698 கிடைத்துள்ளது.
இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் விஜயன், வங்கிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.வழக்கமாக மாதம் ஒருமுறை எண்ணுகையில் காணிக்கையாக ரூ.3 கோடி, விழா காலங்களில் ரூ.4 கோடி வரை கிடைக்கும். தற்போது 210 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் வராததால் முதல்நாளான நேற்று ரூ. 91 லட்சம் கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் வரை எண்ணப்படும் எனத்தெரிகிறது.