மக்களாட்சி மாண்புறுவது எப்போது ?

Added : செப் 15, 2020
Share
Advertisement

''இன்றைக்குச் சர்வதேச மக்களாட்சி தினம்'' என யாரிடமாவது சொல்லிப் பாருங்கள், ''ஆமா.. இருக்கிற சூழலில் அவனவனுக்கு ஆயிரம் கவலை, இதில் மக்களாட்சி குறித்து என்ன யோசிக்கமுடியும்..'' எனச் சலிப்புடன் சொல்வார்கள். மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி. இதில் சொல்லப்படும் 'மக்கள்' என்பது நாம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அதுவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரஜைகள் நாம்.
பிற நாடுகளில் எப்படி ?
ஐ.நா.,வின் கணக்குப்படி 201 நாடுகள் உள்ளன. இவற்றில் 7ல் முழுமையான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. 29 நாடுகளில் அரசியலமைப்பு சட்ட முறை கொண்ட நாடாளுமன்ற அவை இல்லாத சர்வாதிகார ஆட்சி முறையும், 9 நாடுகளில் அரசியல் அமைப்பு சட்ட முறை கொண்ட நாடாளுமன்றத்துடன் கூடிய சர்வாதிகார ஆட்சி முறையும், 7 நாடுகளில் ஒரு கட்சி ஆட்சியும், 62 நாடுகளில் நாடாளுமன்ற குடியரசுடன் கூடிய நிர்வாக அதிபர் ஆட்சிமுறையும், 32 நாடுகளில் அதிபர் குடியரசு ஆட்சி முறையும், 40 நாடுகளில் நாடாளுமன்ற குடியரசுடன் கூடிய சடங்கு அதிபர் ஆட்சி முறையும் பின்பற்றப்படுகின்றன.மொத்தத்தில் 60 சதவிகித நாடுகளில் பல்வேறு வடிவிலான ஜனநாயக முறைகள் பின்பற்றப்படுகின்றன.
நம் நாட்டில்மக்களாட்சியின் அடிப்படையான, நாடாளுமன்ற முறையின் விதை இந்தியாவில் 1919ல் ஊன்றப் பட்டது. எங்களுக்கும், ஆட்சியில் உரிமை வேண்டும் என்று நம்மவர்கள் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் விளைவாக மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மத்திய சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதனை முழுமையான ஜனநாயக அமைப்பு எனச் சொல்ல முடியாது. இதில் இந்தியா முழுமைக்கும் சில லட்சம் பேர்தான் வாக்குரிமை பெற்றிருந்தார்கள். எனினும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விதை இதுவே. இந்த அவையின் முதல் தலைவராக பிரடெரிக் ஒயிட் என்ற ஆங்கிலேயர் இருந்தார். அதன் பிறகு இந்தியர்களே அவைத்தலைவர்களாயினர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டி மார்ச் 1933 முதல் டிசம்பர் 1934 வரை இந்த அவையின் தலைவராக இருந்தார். ஆறாவது மத்திய சட்டமன்றம் நடப்பிலிருந்தபோது 15---8--1947ல் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது.காந்தியின் கருத்துநமக்குச் சுதந்திரம் கிடைத்த தருணத்தில், நம் நாட்டிற்கு எந்தமாதிரியான ஆட்சி முறை வேண்டும் என்ற விவாதங்கள் நடந்தன. காந்தி கூறிவந்த பரவல் முறை மக்களாட்சியான பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்ற கருத்தாக்கம் ஓரங்கட்டப்பட்டு, மேற்கத்தியப் பாராளுமன்ற பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தது. என்றாலும் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்ட போது காந்தி கூறிய பஞ்சாயத்து ராஜ்ஜியம் பற்றிய ஷரத்து மேலோட்டமாக சேர்க்கப்பட்டது.மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றம் அல்லது சட்டசபை, இவற்றின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை, ஆட்சியாளர்களுக்குள்ள அதிகாரம், அரசு இயந்திரம் மற்றும் மக்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது;
இவை அனைத்தும் சரியான விகிதத்தில் செயல்பட்டால் மக்களாட்சி சிறப்பாகச் செயல்படுகிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.தேர்தல்அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபின்னர், வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்தியர்களில் 12 சதவிகிதத்தினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். பெரும்பான்மையோர் வறுமையில் உழன்றனர். இந்த சூழலில் இவர்களால் சிந்தித்து வாக்களிக்க முடியுமா, அது ஜனநாயக முயற்சிக்கு வெற்றி தேடித் தருமா என்ற ஐயம் தலைவர்கள் மத்தியிலிருந்தது.
ஏழை மக்களைச் செல்வாக்கானவர்கள் வாக்களிக்கவிடாமல் தடுக்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டதால் மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாக உருவாக்கினர். மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட்டது. தேர்தல் தான் ஜனநாயகத்தில் முக்கிய அங்கம்.இன்றைய தேர்தல்இன்றைய தேர்தலில் வெற்றியே பிரதானம் என்பதால், அதனைச் சாத்தியமாக்க நேர்மையற்ற செயல்கள் அரங்கேறுகின்றன. பணம், ஜாதி, மத அடையாளங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே" என்று கோட்பாட்டு ரீதியான அழகான விளக்கம் சொல்லப்பட்டாலும் கூட, வெற்றி பெற்றவுடன் அவர்கள் மக்களின் எஜமானராகி விடுகிறார்கள்.இன்றைய மக்களாட்சியின் முக்கிய அம்சம், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை. ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான உறுப்பினர்கள் வெற்றி பெற்றுவிட்டால் பிரச்னை இல்லை. இல்லையென்றால் குதிரைப் பேரம், ஆள்கடத்தல், ரிசார்ட்டில் உல்லாசம் எல்லாம் நடக்கும். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள், மக்களுக்காகப் பேசுவதைவிட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய மக்களாட்சி1949 நவ.,24ல் முழுமைபெற்ற அரசமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய அம்பேத்கர்,"இந்தியாவில் அரசியல் மக்களாட்சி வந்துவிட்டது. தற்போது வெள்ளையர் அரசாங்கம் வெளியேறிவிட்ட நிலைமையில், நம் மக்களாட்சியின் குறைபாடுகளுக்கு வேறு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. நம் குறைபாடுகளுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று எச்சரித்தார்.
சமுதாயத்தில் நிலவும் அனைத்துவிதமான ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும் என்பதில் தொடங்கி, தொழில் வளர்ச்சியும், பொருளாதார வசதிகளும் ஒரு சிலரிடம் குவிந்துவிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுவரை, பல்வேறு கோட்பாடுகளை மக்களாட்சி மலர்வதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும் அவை முழுமைபெறவில்லை."மக்களாட்சி என்பது மக்களின் பங்களிப்போடு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்" என்றார் காந்தி.
நம்மில் பெரும்பாலானோர் தேர்தலோடு அவர்களின் பங்களிப்பு முடிந்துவிடுவதாகக் கருதுகின்றனர். உதாரணமாகக் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கூட போதிய அக்கறை மக்களுக்கு இல்லை.என்ன செய்ய வேண்டும்மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட, சமத்துவமும் சுதந்திரமும் அடிப்படையாகும். இதனடிப்படையில் அரசானது அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, கல்வி, அதிகார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைத்தோங்கும்.
நம் தேர்தல் முறையில், போட்டியிடுபவர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுகிறார். அதாவது நான்கு பேர் போட்டியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அதிகபட்சமாக ஒருவர் 30 சதவிகிதம் வாக்கு பெறுகிறார். ஆனால் இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் சேர்ந்து 70 சதவிகிதம் வாக்குகள் வாங்கியிருப்பார்கள். ஆனால் 30 சதவிகித வாக்குகள் பெற்றவரே மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இப்படி பெரும்பான்மை எதிர்ப்போடும், சிறுபான்மை ஆதரவோடும் நடைபெறும் உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சி எப்படி உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாக இருக்க முடியும்? விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் மக்கள் பங்களிப்பு முழுமையாக இருக்கவாய்ப்புண்டு.
உலக நாடுகள் தற்போது மெல்லமெல்ல அதன் பக்கம் நகர்ந்து வருகின்றன.விமர்சனங்களே எப்போதும் நல்ல ஜனநாயகமுறை என கருத்து கொள்ள வேண்டாம். நல்ல மாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்தால் வரவேற்போம். இது நாட்டு வளர்ச்சியின் பாற்பட்டது என விசாலமான பார்வை கொள்வோம். மக்களுக்கான சிறப்பான மாற்றத்தினைக் கொண்டு வருபவர்கள் எந்த மதத்தவராக, ஜாதியினராக, கட்சியினராக இருந்தாலும் ஆதரித்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மலரும். மக்களாட்சி மாண்புறும்.
-ப. திருமலை, பத்திரிகையாளர்thirugeetha@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X