போலீசில் இப்படியும் ஓர் ஆய்வு - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

Added : செப் 15, 2020
Share
Advertisement
போலீசில் இப்படியும் ஓர் ஆய்வு - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

தோழியின் திருமணத்துக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி சிக்னலில் இருந்து, டாக்டர் பாலசுந்தரம் ரோட்டுக்குச் சென்றபோது, மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல இருக்குற ஒரு வரி வசூலர், 'வசூல்' வேலைக்கு உதவியாளர்கள் வச்சிருக்காராம்; மாசம் மாசம் அவரே சம்பளம் கொடுக்குறாராம்,''
''அப்படியா, எந்த ஜோன்ல இந்த கூத்து நடக்குது,'' என சித்ரா கேட்க, ''அதுவா, சொல்றேன்... அந்த லேடி பில் கலெக்டர், அஞ்சு உதவியாளர் நியமிச்சிருக்காராம். வசூலை வாரி கொட்டுறாராம். இதே ஜோன்ல வேலை பார்த்த உதவி கமிஷனர்தான், லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கி, கம்பி எண்ணுனாரு. அதை மறந்துட்டு, எப்ப பார்த்தாலும், கரன்சி எண்ணுறதுல குறியா இருக்காங்களாம்,''
''அப்ப, ஜெயிலுக்கு போக தயாராகிட்டாங்கன்னு சொல்லு,''
''அக்கா, இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். கிழக்கு மண்டலத்துக்கு ஒரு வரி வசூலர், ஜனங்களிடம் வசூலிச்ச தொகையை, கார்ப்பரேஷன்ல கட்டாம சுருட்டிட்டாராம். இதை கேள்விப்பட்ட உயரதிகாரி, விசாரிச்சிருக்காரு. உடனே, உடம்பு சரியில்லைன்னு சொல்லி, விடுப்பு எடுத்துட்டு, 'எஸ்கேப்' ஆகிட்டாராம்,''
''அப்ப, மக்கள் செலுத்திய வரி பணம் என்னாச்சு,''
''இதையெல்லாம், கார்ப்பரேஷன் கமிஷனரும், துணை கமிஷனரும்தான் விசாரிக்கணும்,''
''அதிருக்கட்டும், கார்ப்பரேஷன்ல இருக்குற வருவாய் பிரிவில் மொத்தமே மூணு பணியிடம் தானாம்; ஆறு பேர் நியமிச்சிருக்காங்க. மேற்கு மண்டலத்துல சம்பளம் வாங்குற ஒருத்தரு, இங்க வந்து கையெழுத்து போட்டுட்டு, 'காணாம' போயிடுறாரு. இன்னும் இரண்டு பேர், வெவ்வேறு பிரிவுல வேலை செய்யணுமாம். 'ஒத்தாசை'யா இருக்கட்டும், ரெவின்யூ செக்சன்ல வச்சிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது, வடக்கு தாலுகா ஆபீசை பார்த்த மித்ரா, ''அக்கா, இந்த ஆபீசுக்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்யப் போனா, சாயங்காலம் ஆயிடுதாமே,'' என, கிளறினாள்.
''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டிருக்கேன். உண்மைதான்! இரும்பு கேட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒருத்தரிடம், அஞ்சு டோக்கன் இருக்குமாம். ரூ.200 கொடுத்தால், ஸ்பெஷல் டோக்கன் கொடுப்பாராம். அதை வாங்கினால், காத்திருக்க வேண்டியதில்லையாம்;'டக்'குன்னு, வேலை முடிஞ்சிடுமாம். மத்தவங்க, மாலை, 4:00 மணி வரைக்கும் காத்திருக்க வேண்டியிருக்குதாம்,''
''அக்கா, இதெல்லாம் பரவாயில்லை. அன்னுார் தாலுகா ஆபீசுல ஆயிரக்கணக்குல கேக்குறாங்களாம்,'' ''என்னது, ஆயிரக்கணக்கிலா,'' என, அதிர்ச்சி அடைந்தாள் சித்ரா.
''பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செஞ்சா, மாசக்கணக்குல இழுத்தடிக்கிறாங்க. புரோக்கர் மூலமா போனா, உடனே, ஆர்டர் கெடைக்குது. ஆனா, சொத்து மதிப்புக்கு தகுந்தபடி, 5,000ல் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லஞ்சம் கொடுக்கணுமாம்,'' அதைக்கேட்டு, வாயை பிளந்தாள் சித்ரா. அப்போது, போலீஸ் ஜீப், அவர்களை கடந்து சென்றது.
அதைப்பார்த்த மித்ரா, ''ரைட்டர் சொல்றதைதான், ஏ.சி.,யும் கேட்குறாராம்,'' என, பொடி வைத்து பேசினாள்.
''அப்படியா, அவ்ளோ அதிகாரம் படைச்சவங்க, யாருப்பா,'' என கேட்டாள் சித்ரா.
''அதுவா, தெற்கு பகுதி போலீஸ் ஸ்டேஷன் கிரைம் பிரிவு லேடி 'ரைட்டர்', ஸ்டேஷன்ல இருக்குற எல்லாத்தையும் ஆட்டிப்படைக்கிறாங்களாம். அந்தம்மா சொல்றதை மீறி நடந்தால், அவ்வளவு தானாம். ஒத்துழைக்காதவங்க மீது புகார் சொல்லி, நடவடிக்கை எடுக்க வைக்கிறாங்களாம்,''
''உதவி கமிஷனரும், அந்தம்மா சொல்றதை வேதவாக்காக நினைக்குறதுனால, ஸ்டேஷன்ல டியூட்டி பார்க்குற போலீஸ்காரங்க, நமக்கு விமோசனமே கிடைக்காதான்னு புலம்பிட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, அவிநாசி ரோடு சிக்னலை கடந்து, ஒசூர் ரோட்டில் ஸ்கூட்டரை செலுத்தினாள் மித்ரா.
தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் அலுவலகத்தில் கார் நின்றிருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியிருக்கே; அவர் போகலையா,'' என, கேட்டாள்.
''அக்கா, அவரும், அவருடைய மகனும் ஒரே மாதிரியான கார் பயன்படுத்துறாங்க. ஆபீசில் ரெண்டு ரூம் இருக்கு. ஒன்னுல எம்.எல்.ஏ., இருந்தால், இன்னொன்னுல பையன் இருப்பாரு. எம்.எல்.ஏ., ஆபீசுல இல்லாட்டினாலும், தனது நண்பர்களுடன் ராஜாங்கம் நடத்திட்டு இருக்காராம்,''
''மித்து, இதே மாதிரி, சோமையம்பாளையம் ஊராட்சியிலும் நடக்குதாம். ஊராட்சி தலைவர், ஆபீசுக்கு வருகிறாரோ, இல்லையோ, அவருடைய நண்பர்களும், உறவினர்களும் ஆஜராகிடுறாங்களாம்,''
''ஆட்களுக்கு வேலை சொல்றது; குடிநீர் சப்ளைன்னு எல்லா பிரச்னையையும் கையில் எடுத்துட்டு செய்றாங்களாம். தலைவரின் உறவினர் மற்றும் நண்பர்களின் அதிகாரம் எல்லை மீறி போறதா பொதுமக்கள் பேசிக்கிறாங்க,''
செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா வழியாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்தபோது, ''அக்கா, நான்கு பேருக்கு மேல் தேறலையாம்,'' என, அடுத்த விஷயத்துக்கு தாவினாள் மித்ரா.
''என்னம்மா, என்ன விஷயம், விளக்கமாச் சொல்லேன்,'' என, சித்ரா கேட்க, ''பொறுமையா இருங்க, சொல்றேன்! சிட்டி லிமிட்டுக்குள்ள இருக்குற ஸ்டேஷனுக்கு வர்ற வழக்குகள்ல, பொறுப்புணர்ந்து, ஆர்வம் காட்டி, செயல்பாடுள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் யார் யாருனு ஆய்வு செஞ்சுருக்காங்க,''
''ஒவ்வொரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களின் பணித்திறன், திறமையை விசாரிச்சுருக்காங்க. இதுல, நாலு பேருக்கு மேல தேறலையாம். அதனால, உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைஞ்சுருக்காங்க. முக்கியமான கேஸ் வந்தா, விசாரணை அதிகாரியா, யாரை போடுறதுன்னு குழம்பி இருக்காங்களாம். விரைவில் களையெடுப்பு இருக்கும்னு, போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
ஸ்கூட்டரில், ஸ்டேட் பாங்க் ரோட்டில் பயணித்தபோது, ''ரூரல் லிமிட்டுல ஏதாச்சும் விசேஷம் இருக்கா,'' என, நோண்டினாள் சித்ரா.
''போலீஸ் ஸ்டேஷன்ல டெய்லி ஏதாவது ஒரு பிரச்னை ஓடிட்டுதான் இருக்கும். இதுல, பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு போதாத காலம்னு சொல்லணும். ஆறு மாசத்துல ரெண்டு கொலை நடந்துருக்கு; ஒரு துப்பும் கெடைக்கலையாம்,''
''புதுசா வந்திருக்கிற எஸ்.பி., கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தச் சொல்லியிருக்காரு. ஒருத்தரை விசாரிச்சப்போ, போலீஸ்காரங்க, எக்குத்தப்பாய் நடந்துக்கிட்டாங்களாம்; கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. விசாரணை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு, எஸ்.பி.,யிடம் மனு கொடுத்திருக்காங்களாம்,'' என்றபடி, கார்ப்பரேஷன் அலுவலக வளாகத்தில், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.
''மித்து, இதெல்லாம் சின்ன பிரச்னை. டாய்லெட்டுல வழுக்கி விழுந்திட்டாருன்னு சொல்லிடுவாங்க,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷனுக்கு சி.எம்.ஏ., பாஸ்கரன் வந்திருந்தாரே; சில அதிகாரிகள் மிரண்டு போயிருக்காங்களாமே,'' என, கிளறினாள்.
''அதுவா, கமிஷனர் சேம்பர்ல அமர்ந்து, ரெண்டு 'மீட்டிங்' நடத்துனாரு. ரொம்பவும் வெளிப்படையா பேசியிருக்காரு. 'நான் வகிக்கிற பதவிக்கு, எதிர்காலத்துல நீங்களும் வரலாம்; நீங்க இருந்தா, என்ன செய்வீங்களோ, அதையே செய்யப் போகிறேன்; வருத்தப்படாதீங்க,'ன்னு சொல்லியிருக்காரு. அதனால, சில அதிகாரிகள் 'அப்செட்'டுல இருக்காங்களாம்,''
''அதெல்லாம் சரி, 'மாஜி' கமிஷனர் இன்னும் வீட்டை காலி செய்யலையாமே,''
''ஆமாக்கா, அவருக்கு சென்னைக்கு போறதுக்கு இஷ்டம் இல்லையாம். பக்கத்து மாவட்டத்துல காலியா இருக்கற பதவியை வாங்குறதுக்கு முயற்சி செய்றாராம்,''
''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''அரசியல் மேட்டர் எதுவுமே சொல்லலையே,'' என, 'ரூட்' மாறினாள்.
''மேட்டுப்பாளையம் தொகுதியை கைப்பத்துறதுக்கு, தி.மு.க., தரப்பிலும், அ.தி.மு.க., தரப்பிலும் இப்பவே, காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்க. 'சீட்' வாங்குறதுக்கு ஏகப்பட்ட போட்டி இருக்குதாம்,''
''ஆளுங்கட்சி தரப்புல, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.பி., செல்வராஜ், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், காரமடை முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜ்குமார், 'சீட்' வாங்குறதுக்கு முயற்சி பண்றாங்களாம்,''
''தி.மு.க., தரப்புல, அஞ்சு கோஷ்டியா இருக்காங்களாம். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன்னு, ஒவ்வொருத்தரும் தனி ஆவர்த்தனம் செய்றாங்களாம். இப்படி இருந்தா எப்படி தேர்தல்ல ஜெயிக்கிறதுன்னு, உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க,''
''ஆளுங்கட்சிக்காரங்க, டீக்கடையில் மோதிக்கிட்டாங்களாமே,''
''அடடே, போத்தனுார்ல நடந்த விஷயம், ஒங்களுக்கும் தெரிஞ்சிருச்சா. 100வது வார்டை ரெண்டா பிரிச்சிருக்காங்க. ஒரு பாதியை வேணுகோபாலுக்கும், இன்னொரு பாதியை சாந்திக்கும் கொடுத்திருக்காங்க. இதுல, முல்லை நகரை, தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொடுக்கணும்னு வேணுகோபால் போர்க்கொடி துாக்கியிருக்காரு,''
''டீக்கடையில் வச்சு 'பஞ்சாயத்து' பேசியிருக்காங்க. வாக்குவாதம் பெருசாயிடுச்சாம்; பகுதி கழக செயலாளர் போயி, தடுத்திருக்காரு. மதுக்கரையில் மினிஸ்டர் கலந்துக்கிட்ட விழாவுக்கு ரெண்டு தரப்பும் போயிருக்கு. அவரோ, கண்டுக்காம போயிட்டாராம்,'' என்றபடி, மாநகராட்சி வளாகத்துக்குள் நடக்க ஆரம்பித்தாள் மித்ரா.
துணை கமிஷனர் ஜீப் நின்றிருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''பரவாயில்லையே, 'மல்டி கலர்' சுழல் விளக்கை கழட்டிட்டாங்களே,'' என்றாள்.
''அக்கா, கலெக்டர் காரில் இருந்த ஊதா நிற சுழல் விளக்கை கழட்டிட்டு, 'மல்டி கலர்' விளக்கு பொருத்தியிருக்காரு; மத்த அதிகாரிங்க இன்னும் கழற்றலையாம்,'' என்றபடி, 'அம்மா' மூலிகை உணவகத்துக்குள் நுழைந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X