மந்தமான வானிலை... நிதானமாக எழுந்த சித்ரா, மொபைல்போனில், மித்ரா வுக்கு டயல் செய்தாள்.
''அக்கா எப்படி இருக்கீங்க...இன்னைக்கு என்ன புரோக்ராம்'', ''ஒன்னுமில்ல மித்து, தென்னம்பாளையம் மார்க்கெட் வரை போய்ட்டு, வீட்டுக்கு வர வேண்டியது தான்..''
''நானும் வர்றேன்..'' என கூறிய மித்ரா, அடுத்த, சில நிமிடங்களில் மார்க்கெட்டில் இணைந்தனர்.
சந்தையில் என்ன புதுசு...கண்களை அலையவிட்டபடியே, ''வியாபாரிங்க, சகட்டுமேனிக்கு, தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்படுத்துறாங்க. அதிகமா பயன்படுத்துறவங்கள தேடிபிடிச்சு, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, 'மாமூல்' வசூலிக்கிறாங்களாம்...'' என்றாள் சித்ரா
''பைன் போடுறத விட்டுட்டு, 'மாமூல்' வாங்கற நிலமை வந்துருச்சு'' என்றாள் மித்ரா.
''நம்ம ஊர்ல, நடமாடும் ரேஷன் கடை வருதாம் அதே மாதிரி நடமாடும் மலிவுவிலை காய்கறி கடை வந்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்'' என்ற சித்ராவிடம், ''ஆமாங்க்கா... ஒவ்வொரு தாலுகாவுக்கும் நடமாடும் கடை வருதாம். வண்டி வசதி, டிரைவர் சம்பளம்னு, பல செலவு இருக்கு. அதுல கையை வைச்சு, கல்லா கட்டலாம்னு, இப்பவே அதிகாரிங்க 'பிளான்' போட்டுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''எலக் ஷன் நேரத்துல மக்கள்கிட்ட, கெட்ட பெயர் வாங்காம இருந்தா சரி...''
''இப்படிப்பட்ட அதிகாரிங்க மத்தியில, சில நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்றாங்க, மித்து. கொஞ்ச நாள் முன்னாடி, சிவன்மலை கோவில்ல அதிகாரியா இருந்தவர 'டிரான்ஸ்பர்' பண்ணாங்க. அவரு, ஊதியூர் கோவிலுக்கு சொந்தமான, 100 ஏக்கர் நிலத்த ஆக்கிரமிப்புல இருந்து மீட்க கடுமையா முயற்சி பண்ணாராம். அதுக்குள்ள அவர மாத்திட்டாங்களாம்''
காய்கறி 'பர்சேஸ்' முடித்து, பக்கத்திலிருந்த பேக்கரிக்குள் நுழைந்தனர். ரெண்டு இஞ்சி டீ, ஆர்டர் செய்தபடி, பேச்சை தொடர்ந்தனர்.
''இப்பெல்லாம், பல இடங்கள்ல அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சிகாரங்களுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குது. உடுமலைக்கு பக்கத்துல இருக்கற மங்கலகரமான ஸ்டேஷன்ல, வேல பாக்கற டிரெயினிங் ஆபீசர், மண் அள்ளி வந்த ஆளுங்கட்சிகாரரின் வண்டியை பிடிச்சாங்க. வந்தவங்க கிட்ட 'டாக்குமென்ட்ஸ்' இல்ல; வண்டியை விட சொல்லி, அதிகாரிகிட்ட வாக்குவாதம் பண்ணியிருக்காங்க. அந்த ஆபிசரோ, கண்டுக்காம போய்ட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.
'கரெக்டுங்க்கா... இவர மாதிரி எல்லா ஆபிசரும் இருந்தா நல்லாருக்கும்'' என தலையாட்டிய மித்ரா, ''அதுக்கு நேர்மாறா ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. அதே ஊர்ல வேல பாக்கிற ஒற்றர்படை போலீஸ் ஒருத்தர், ஊருக்குள்ள லாட்டரி விக்கிறவனை பிடிக்காம, பக்கத்து மாவட்டத்து எல்லைக்கு போயி, லாட்டரி விக்கிறவனை பிடிச்சுட்டு வந்துருக்காரு. விசாரிச்சப்பதான் தெரிஞ்சதாம், அவருக்கு வசூல் பத்தலையாம்,'' என்றாள்.
''ஸ்டேஷன்ல நடக்கற தில்லாலங்கடி வேலையை, ஆபீசருக்கு செல்ற, ஒற்றர் படை போலீஸ்சே வசூல் வேட்டையாடுறது...வேலியே பயிர மேயிற கதையால்ல இருக்கு... இதேபோலத்தான் எல்லா ஊர்கள்லயும், ஒற்றர் படை போலீசார் தனி ராஜ்ஜியமே நடத்துறாங்களாம்''
'ஏம்பா... முத்து, அவங்க ரொம்ப நேரமா 'வெயிட்' பண்றாங்க. டீ கொண்டுபோய் கொடுப்பா' என, கடை ஓனர் சத்தமிட, டீ உடனே வந்தது, இருவரும் குடிக்க ஆரம்பித்தனர்.
''லிங்கேஸ்வரர் ஊர்ல, 120 அங்கன்வாடி மையம் இருக்கு. அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் தறாம மாசா மாசம் இழுத்தடிக்கிறாங்களாம். சம்பளம் கொடுக்க 'பில்' தயாரிக்கும் அதிகாரிதான் இப்டி நடந்துக்குறாராம். உதவியாளர், ஊழியர்ங்ககிட்ட தலைக்கு அம்பது கேட்டு அந்த அதிகாரி கறார் வசூல் செய்றாராம். இதனால, மாவட்ட அதிகாரிக்கும், இவருக்கும் இடையே 'லடாய்'.
அப்போது மித்ராவின் போன் ஒலித்தது. ''ஹாய்... 'ரகுநாதன்' அங்கிள் எப்படி இருக்கீங்க... அடுத்த வருஷம் 'ரிட்டையர்' ஆக போறீங்க போல...'' என பேசி முடித்து இணைப்பை துண்டித்தாள்.
''சிட்டி' போக்குவரத்து அதிகாரி ஒருத்தர், 'டைரி' வைச்சு, கலெக் ஷன் பண்றார்ன்னு, போன வாரம் பேசினோம்ல. கமிஷனர் அந்த அதிகாரிய கூப்பிட்டு, 'லெப்டு, ரைட்' வாங்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''அப்படியாக்கா.. அவரு 'டாலர் சிட்டி'க்கு, பல லகரங்களை கொடுத்து வந்திருக்காராம், அதனால, கம்முனு இருப்பாரான்னு தெரியல; பொறுத்திருந்து பாக்கலாம்,'' என்றாள் மித்ரா. டீ குடித்து முடிக்கவும், மேகம் கறுத்து, மழைத்துளி மண்ணில் விழ ஆயத்தமானது. இருவரும் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE