சசிகலா ரிலீஸ் தேதி அறிவிப்பு: முன்கூட்டியே விடுதலை இல்லை | Dinamalar

சசிகலா 'ரிலீஸ்' தேதி அறிவிப்பு: முன்கூட்டியே விடுதலை இல்லை

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (22)
Share
சசிகலா 'ரிலீஸ்' தேதி அறிவிப்பு: முன்கூட்டியே விடுதலை இல்லை

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என்றும், அடுத்தாண்டு ஜனவரி, 27ல், விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்றும், கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

அபராத தொகையான, 10 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால், சசிகலா மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான்கு ஆண்டு சிறைதமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க,, பொதுச் செயலராக இருந்தவருமான, மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 2014ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூன்று பேருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டன.

இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த, 2015ல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கடந்த, 2017 பிப்ரவரி யில், சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரையும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா
மத்திய சிறையில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூவரும், 2017 பிப்., 15ல், சிறையில் ஆஜரானதை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


சிறை விதிமுறைதண்டனை காலத்தின் போது, சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்து, 'ஷாப்பிங்' செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இடையில், தன் கணவர் மறைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சில நாட்கள் பரோலில் வந்தார்.இந்நிலையில், சமீப காலமாக, சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகப் போவதாக செய்திகள் வெளியாகின.

அவரது வழக்கறிஞர், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, சசிகலா ஏற்கனவே, 35 நாட்கள் சிறையிலிருந்தார். தற்போதைய தண்டனை காலத்தில், 17 நாட்கள் பரோலில் சென்றிருந்தார். இந்த, 17 நாட்கள், அவர் ஏற்கனவே சிறையிலிருந்த, 35 நாட்களில் கழிக்கப்படும்.இதுதவிர, கர்நாடக சிறை விதிகளின்படி, நன்னடத்தையின் அடிப்படையில், குற்றவாளியின் தண்டனை காலத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் கழிக்கப்படும். இதை கணக்கிட்டால், சசிகலா இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, அவர் கூறியிருந்தார். இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலா எப்போது விடுதலையாவார் என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர் லதா அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுஉள்ளதாவது:சிறை விதிமுறைப்படி, சசிகலாவின் தண்டனை காலம், அடுத்தாண்டு ஜன., 27ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அன்று அவர் சிறையிலிருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.


முற்றுப்புள்ளிஅதேநேரத்தில், அபராத தொகையான, 10 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால், மேலும் ஒரு ஆண்டுக்கு, அவர் தண்டனை அனுபவிக்க நேரிடும். 'பரோல்' வசதியை பயன்படுத்தினால், விடுதலை தேதி மாறுபட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.இதையடுத்து, சசிகலா முன் கூட்டியே விடுதலையாவார் என்றும், அதனால், அ.தி.மு.க., வில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வெளியான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X