அண்ணாதுரை தீர்மானங்களுக்கு ஆபத்து வருகிறது | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை தீர்மானங்களுக்கு ஆபத்து வருகிறது

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (77)
Share
அண்ணாதுரை தீர்மானங்கள் ,ஆபத்து:ஸ்டாலின் அச்சம்

சென்னை : ''அண்ணா தந்த தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - நரசிம்மன்: திருத்தணி தொகுதி, மத்துார் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: தற்போது, அப்பகுதியில் மின் அழுத்த குறைபாடு இல்லை. எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
நரசிம்மன்: நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே, அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல், திருத்தணியிலும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மத்துார் கிராமத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இடம் கிடைத்ததும், துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: இந்த சட்டசபையில், இரு மொழி கொள்கை, மாநில சுயாட்சி, தமிழ்நாடு பெயர் சூட்டி, தீர்மானங்களை நிறைவேற்றியவர், அண்ணாதுரை.
அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது.
அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை, அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நேர்மை நகரில், துணை மின் நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும். கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணியை துவக்க வேண்டும்.


அமைச்சர் தங்கமணி: நேர்மை நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக, பணி நிறுத்தப்பட்டது; விரைவில், பணி முடிக்கப்படும்.கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அந்தப் பணியும் விரைவாக துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
எல்லாவற்றிலும் பொய் கணக்குஇணையதளம் வாயிலான உறுப்பினர் சேர்க்கையை, தி.மு.க., முப்பெரும் விழாவில், அக்கட்சி தலைவர், ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. ஈ.வெ.ராமசாமி விருது - மா.மீனாட்சிசுந்தரம்; அண்ணாதுரை விருது - அ.ராமசாமி; கருணாநிதி விருது - உபயதுல்லா; பாவேந்தர் விருது - தமிழரசி; அன்பழகன் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு, ஸ்டாலின் வழங்கினார்.
'எல்லாரும் நம்முடன்' என்ற தலைப்பில், இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியையும், ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின், உறுப்பினராக சேர்ந்த இளம்பெண்ணுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கினார். விழாவில், பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், ''வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, பொதுக்குழு கூட்டத்தையே நடத்தி, ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்,'' என்றார்.

ஸ்டாலின் பேசியதாவது:
கொரோனா காலத்தில், உலக அளவில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடத்திய, இரண்டாவது கட்சியாக தி.மு.க., திகழ்கிறது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ௫ லட்சத்தை தாண்டி விட்டது; ௮,000 பேர் இறந்துள்ளனர். இது, அரசு கொடுத்த புள்ளிவிவரம். கொள்ளை அடிப்பதிலும் பொய் கணக்கு, கொரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையிலும் பொய் கணக்கு தான் காட்டப்படுகிறது.

கொரோனாவை விட கொடிய ஊழல் புரியும், அ.தி.மு.க., அரசை அகற்ற வேண்டும். ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் துணிச்சல், அ.தி.மு.க., அரசுக்கு உள்ளதா? 'நீட்' தேர்வு மன உளைச்சலால், ௧௩ மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு, மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும், அ.தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய, தமிழக மக்கள் தயாராகி விட்டனர். நாமும், இந்த முப்பெரும் விழாவில், சபதம் எடுப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X