சென்னை : 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு, குழந்தைகளும் அடிமையாவதாக, சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு: ஆன்லைன் சூதாட்டத்தால், இளைஞர்கள் பணத்தை இழக்கின்றனர்; தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தடை விதிக்கலாம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி, வழக்கறிஞர் வினோத் என்பவரும் மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, ''ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, அரசு தடை விதிக்கலாம். இந்த வழக்கில் தமன்னா, விராட் கோலியை பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டும்,'' என்றார்.அதற்கு, நீதிபதிகள், 'ஆன்லைன் விளையாட்டுகளால், இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.'பெற்றோர் துாங்கிய பின், ஆன்லைனில் குழந்தைகள் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாகின்றனர்' என, வேதனை தெரிவித்தனர்.
அதிகாரமில்லை
வழக்கில், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை சேர்க்கவும், மனுவுக்கு அரசு பதில் அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.இவ்வழக்கில், மத்திய தகவல் தொலை தொடர்பு துறை தாக்கல் செய்த பதில் மனு:எந்த இணையதளங்களையும் முடக்க, தானாக உத்தரவிட தொலை தொடர்பு துறைக்கு அதிகாரமில்லை.நீதிமன்ற உத்தரவுப்படி அல்லது மின்னணு அமைச்சகத்தின் சைபர் சட்ட குரூப் ஒருங்கிணைப்பாளர் உத்தரவுப்படி, இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலாம். ஆன்லைன் சூதாட்டங்களை மூடுவதற்கு, தொலை தொடர்பு துறை, சரியான துறை அல்ல.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE