உள் ஒதுக்கீடுக்கு சட்டம்: நீட் அரசியலில் இ.பி.எஸ்., கலக்கல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள் ஒதுக்கீடுக்கு சட்டம்: 'நீட்' அரசியலில் இ.பி.எஸ்., கலக்கல்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (47)
Share
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் கலக்கல் சட்டம் தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு அரசியலுக்கு முதல்வர் பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்தார். இந்த உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.அரசு
உள் ஒதுக்கீடுக்கு சட்டம்: 'நீட்' அரசியலில் இ.பி.எஸ்., அதிரடி :

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் கலக்கல் சட்டம் தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு அரசியலுக்கு முதல்வர் பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் முதல்வர் நேற்று தாக்கல் செய்தார். பின் சபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு விவகாரத்தில் தமிழகத்தில் ஆதரவு, எதிர்ப்பு என்ற போட்டி அரசியல் காணப்படுகிறது.

இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதற்காக மத்திய அரசை எதிர்த்து அ.தி.மு.க. போர்க்குரல் எழுப்ப வேண்டும் என்றும் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.இப்படியொரு தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் அப்போது மத்திய ஆட்சியில் இடம் பெற்ற தி.மு.க.வும் அதற்கு காரணம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் பதிலடி தரப்பட்டு வருகிறது.இச்சூழலில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கும் வகையிலும் இத்தேர்வால் அதிகம் பாதிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாகவும் 7.5 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடாக வழங்கும் மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மசோதாவில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன்படி மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நாடு முழுவதுக்கும் பொதுவான நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நுழைவு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்த தகுதி தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால் மிக குறைந்த எண்ணிக்கையிலான இடங்களிலேயே சேர்கின்றனர்.


கலையரசன் கமிஷன்இந்த நிலையை ஆய்வு செய்வதற்கு உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆய்வுக்கு பின் 'ஜாதி, பெற்றோரின் தொழில், கல்வி, வருமானம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்கள் இடையே சமூக, பொருளாதார இடைவெளி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்கள் குறைபாடான நிலையில் உள்ளனர்.

'எனவே அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும்' என கலையரசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.நுழைவு தேர்வை தகுதியாக வகுத்துள்ள அனைத்து படிப்புகளுக்கும் இந்த ஒதுக்கீட்டை நீட்டிக்க முடியும் என்றும் அக்கமிஷன் கூறியுள்ளது.


அரசு முடிவுஅதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிற மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் '2020ம் ஆண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டம்' என அழைக்கப்படும்.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை தவிர அரசு கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்கள்; சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களில் 65 சதவீத இடங்கள்; சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீத இடங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு அமலாகும்.

எந்தெந்த பள்ளி அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்திருத்தம், வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசு துறைகளால் நிர்வகிக்கப்படும் பள்ளி மாணவர்களுக்கு இந்த முன்னுரிமை பொருந்தும்.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு உதவி பெறாத பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களும் அரசு பள்ளி மாணவர்களாக கருதப்படுவர்; அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். - பி.எஸ்.எம்.எஸ். - பி.ஏ.எம்.எஸ். - பி.யூ.எம்.எஸ். மற்றும் பி.எச்.எம்.எஸ். ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தச் சட்டத்தில் ஒதுக்கப்படும் இடங்களுக்கு போதிய மாணவர்கள் இல்லையென்றால் அந்த இடங்களில் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


300 மாணவர்களுக்கு பலன்இம்மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது: அ.தி.மு.க. அரசின் மூன்றாண்டு காலத்தில் 3340 இடங்கள் மருத்துவப் படிப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.புதிய சட்டத்தின் வழியாக ஒரு ஆண்டுக்கு அரசு பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வரை மருத்துவ இடங்களில் கூடுதலாக சேர முடியும். இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: புதிய சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை வழங்குவதில் இட ஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும்.
உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் கிராமப்புற டாக்டர்களுக்கு மேல்படிப்புக்கான உள் ஒதுக்கீடு சட்டங்களின் வாயிலாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த உள் ஒதுக்கீடுக்கு சட்டப் பிரச்னைகள் இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.


10 சதவீதம் தேவைசட்ட மசோதா தொடர்பான விவாதத்தில் தி.மு.க. சார்பில் மாசிலாமணி பேசியதாவது:அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிபதி கலையரசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆனால் 7.5 சதவீதம் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது.இந்த சட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் முன்னுரிமை பெறுவோராக சேர்க்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிக்கல் வராமல் இதை முறைப்படி அமல்படுத்த வேண்டும். அதேபோல் என்ன தான் உள் ஒதுக்கீடு வழங்கினாலும் தமிழகத்தை பொறுத்தவரை நீட் தகுதி தேர்வை ரத்து செய்தால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X