புதுடில்லி: ''எல்லை பிரச்னையில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. எல்லையையும் இந்திய இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கைக்கும் ராணுவம் தயாராக உள்ளது'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஜூனில் காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியது; நம் வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில் நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தை குவித்ததால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சை அடுத்து அமைதி திரும்பியது. ஆனாலும் சீன ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவில் சீன ராணுவ அமைச்சரை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இருந்தாலும் எல்லையில் சீனாவின் வாலாட்டம் குறையவில்லை.
இந்த பரபரப்பான சூழலில் சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய - சீன எல்லை பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை. எல்லை வரையறை விஷயத்தில் எந்த சுமுக முடிவையும் சீனா ஏற்க மறுக்கிறது. இதனால் எல்லை விஷயத்தில் இரு நாடுகளுக்குள் இடையே எந்த பரஸ்பர தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை.எல்லை விவகாரம் தொடர்பாக 1993 மற்றும் 1996ல் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை சீனா ஏற்க மறுக்கிறது.
கடந்த ஏப்ரலில் இருந்து லடாக் பகுதியில் சீன ராணுவம் படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஜூனில் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீன படைகளின் அத்துமீறலை நம் வீரர்கள் துணிச்சலுடனும் உறுதியுடனும் போராடி தடுத்து நிறுத்தினர்; அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் பேச்சு வாயிலாக தீர்வு காண்பதையே இந்தியா விரும்புகிறது.
ஆனால் லடாக், கோக்ரா, பாங்காங் சோ ஏரி ஆகிய பகுதிகளில் எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை மாற்றி ஒருதலைப்பட்சமாக சீன ராணுவம் செயல்படுகிறது. இறையாண்மையை பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கைக்கும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது.
எல்லையில் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது என்பதை சீன ராணுவ அமைச்சருடனான சந்திப்பின் போது நேரடியாகவே தெரிவித்தேன்.
ரஷ்யாவில் சீன வெளியுறவு அமைச்சரை நம் வெளியுறவு அமைச்சர் சந்தித்தபோதும் சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து விளக்கினார்.அப்போது இரு தரப்பும் சில விஷயங்களை ஏற்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் தொடருகின்றன. இதற்கு நம் வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு கட்டமைப்புக்காக பட்ஜெட்டில் முன் எப்போதையும் விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லையில் உள்ள வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.இந்த சபையும் நாட்டு மக்கள் 130 கோடி பேரும் எப்போதும் நம் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பர். பிரதமர் மோடி சமீபத்தில் லடாக்கிற்கு சென்றபோது ராணுவ வீரர்களிடம் இதை தெரிவித்தார். நம் வீரர்களின் திறமையில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. எல்லையில் அத்துமீறி செயல்பட்டால் அது இரு தரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சீன அரசு உணரும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
விவாதிக்க அனுமதி மறுப்பு
இந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் விளக்கம் அளித்து முடித்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்ப முயன்றனர். ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா இதற்கு அனுமதி மறுத்தார்.பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதாலும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதாலும் இது குறித்து சபையில் விவாதிக்க முடியாது என பார்லிமென்ட் அலுவல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.இதற்கிடையே லடாக் பகுதியில் எல்லைக்கு அருகில் அதிவேக தகவல் தொடர்பு வசதிக்காக சீன ராணுவம் 'பைபர் ஆப்டிக் கேபிள்' கட்டமைப்பு வசதியை உருவாக்கி வருவதாக கூறப்பட்ட புகாரை அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் மறுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE