இரண்டு வார்த்தைகள் போதும்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இரண்டு வார்த்தைகள் போதும்

தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் குடும்பத்தின் வாரிசுகளின் தேவைக்கு ஏற்றார்போல் உடல் ரீதியாக, பொருள் ரீதியாக, மன ரீதியாக நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்து கொண்டிருக்கும் தாத்தா பாட்டிகளின் அருமை அவர்கள் இருக்கும் பொழுது யாருக்கும் தெரிவதில்லை ஆனால் அவர்களின் மறைவுக்கு பின்பு நிச்சயமாக ஒவ்வொருவரின் இதயத்திலும் ஏதேனும் ஒரு இடம் அவர்களின் இழப்பை நினைத்து கனத்துக் கொண்டே இருக்கும்!


தீர்வு சொல்பவர்கள்ஒரு குடும்பத்தின் மூத்த அங்கத்தினர்களான தாத்தா பாட்டிகளுக்கு மட்டும்தான் தெரியும் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரின் உண்மையான குணமும் மனநிலையும். எவ்வளவுதான் உதாசீனப் படுத்த பட்டாலும் தங்கள் பேரக் குழந்தைகளுக்காக அந்த குடும்பத்தையே சுற்றி சுற்றி வருகிறார்கள் தாத்தா பாட்டிகள். ஒரு குடும்பம் மிக ஒற்றுமையாக இருக்கிறது என்றால் அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மிகவும் அன்பானவராக இருக்கிறார் என்றே அர்த்தம். ஒவ்வொருவரின் தேவைகளையும், பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் தராசுகோல் போல் நடுநிலையாக அதேநேரம் அதற்கு தகுந்தார்போல் தீர்வு சொல்வதற்கு தாத்தா பாட்டிகளால்தான் முடியும்.நெல்லிக்காய் மூடை சிதறிவிடாமல் எப்படி ஒரு முடிச்சு காத்து நிற்கிறதோ அதுபோல குடும்ப ஒற்றுமையின்றி பிரிந்துபோய் விடாமல் காப்பவர்கள் குடும்பத்தின் மூத்த அங்கத்தினர்களான தாத்தா பாட்டிகள்தான். அதனால்தான் தாத்தா பாட்டிகளின் மறைவுக்கு பின்பு பெரும்பாலான குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன.


இணை இல்லைதாத்தா பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் உள்ள பாசப்பிணைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தன் மகனுக்கோ, மகளுக்கோ தெரியாமல் பேரக் குழந்தைகளுக்கு சாக்லெட், ஐஸ்கிரீம், சிப்ஸ் என தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து, அதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல் உபாதைக்காக காது கூசும் படி அவர்கள் திட்டு வாங்கினாலும் கூட அடுத்த நாளே அதனை மறந்து விட்டு, குழந்தைகளுக்கு அதே தின்பண்டங்களை வாங்கி கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து குதுாகலிக்கும் குழந்தைகள் தான் நமது தாத்தா பாட்டிகள். குழந்தைகள், பெரியவர்கள் என யார் தப்பு செய்தாலும் அதனை தட்டிக் கேட்கும் அதிகாரம் படைத்திருந்தாலும் கூட, கெஞ்சிக் கொண்டே லாவகமாக அவர்களின் தப்பை உணர்த்தும் பக்குவம் தாத்தா பாட்டிகளுக்குத்தான் உண்டு.


ரசிக்கும் உரையாடல்பேரக் குழந்தைகளுடன் அவர்களின் உரையாடல் கொஞ்சல் ரசிக்க கூடியவையாக இருக்கும். தாத்தா, பேரக்குழந்தையிடம் "டேய் நான் சொல்றத கேளுடா, மழையில் நனையாதே, சளி பிடிக்கும். நாளைக்கே நான் செத்துப்போனா நீதானடா எனக்கு கொள்ளி போடணும்!" என்பார். ஆனால் பேரனோ ஒன்றும் அறியாமல் வெகுளியாக. “ஐயோ தாத்தா! நான் போட மாட்டேன். நாளைக்கு எனக்கு ஸ்கூல்”என்பான். தாத்தா விழுந்து விழுந்து சிரிப்பார். இதுபோன்ற பாசப்பிணைப்பு வேறு உறவுகளில் இல்லை. பேரன் பாட்டியிடம் “பாட்டி, எங்க ஹெட் மாஸ்டர் வந்துக்கிட்டிருக்காரு! சீக்கிரம் வீட்டுக்குள்ள வா” என்பான். பாட்டியோ “நான் ஏன்டா உங்க ஹெட் மாஸ்டருக்கு பயப்படணும்?” எனக் கேட்க பேரனோ “ஐயோ பாட்டி! நீ செத்துப் போயிட்டேன்னு சொல்லித்தான் லீவு லெட்டர் கொடுத்துட்டு நான் வீட்ல இருக்கேன்” எனக் கூற, உடனே வீட்டுக்குள் ஓடி வரும் பாட்டி பேரனின் காதை செல்லமாக திருகுவாள். இது போன்ற சுவாரசியமான உறவு பிணைப்பு தாத்தா பாட்டிகளிடம்
மட்டும்தான் கிடைக்கும்.


பணம் இல்லை என்றாலும்கையில் பணம் இல்லை என்றாலும் தங்கள் உடல் உழைப்பைக் கொட்டி, தங்கள் ஆரோக்கியத்தை இழந்து, உடல் மெலிந்து, துாக்கம் கெட்டு கண்களில் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் தாங்கி, தங்கள் பேரக் குழந்தைகளை காணமுடியாமல் முதியோர் இல்லத்திலும், வீடுகளிலும் தனித்து இருக்கும் முதியவர்கள் இன்று ஏராளம்.தாத்தா பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் அன்பு அதிகமாவதை என்னவோ சிலர் விரும்புவதில்லை. படிப்பு கெட்டுப் போய்விடும் என பல காரணங்களைச் சொல்லி தாத்தா பாட்டிகளை தனிமை படுத்துகின்றனர். தாய்வழி தாத்தா பாட்டி தந்தை வழி தாத்தா பாட்டி என கணவன் மனைவிக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை காரணமாகக் கொண்டு குழந்தைகளை தாத்தா பாட்டியுடன் நெருங்க விடாமல் தடுப்பதால் இளைய
சமுதாயத்திற்கு உண்மையான அன்பும் பாசமும் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது.


மேன்மையான அன்புதாத்தா பாட்டிகளின் அன்பு மேன்மையானது. அவர்களுக்கு தெரியாது என நினைத்து நாம் செய்யும் அலட்சியம், உதாசீனம், அருவெருப்பு, வெறுப்பு என அனைத்தையுமே, நன்றாகத் தெரிந்திருந்தாலும் கூட தங்கள் பேரக் குழந்தைகளுக்காக அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள்.உங்கள் குழந்தைகளை தாத்தா பாட்டியுடன் பழக விடுங்கள். அவர்களால் உங்கள் குழந்தைகளுக்கு பாசப் பிணைப்பு, குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை போன்ற அனுபவ அறிவு மற்றும் சமூகப் பொறுப்பை ஏற்படுத்தித் தர முடியும். கோடி ரூபாய் கொடுத்தாலும் எந்த கல்வி நிறுவனங்களாலும் குழந்தைகளுக்கு இதனை கற்றுத்தர முடியாது. மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுபேரன் கொள்ளுபேத்தி என குடும்பத்தின் கடைசி வாரிசு வரை தங்கள் பாசத்தை கொட்டி வளர்க்கும் தாத்தா பாட்டிகளை எந்த காரணத்தைக் கொண்டும் உதாசீனப்படுத்தாதீர்கள். குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்காதீர்கள். உங்கள் குழந்தைகளிடம் தாத்தா பாட்டி பற்றிய எதிர்மறைக் கருத்துக்களை மற்றும் குறைகளை பதிவு செய்யாதீர்கள்.


கடவுளாக மதிப்போம்இருந்தாலும், இறந்தாலும் நமது சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள்தான் நமது தாத்தா பாட்டி. காலம்பூரா நம்முடனே நடந்து வந்தாலும் வேலை முடிந்தவுடன் கழற்றி போடும் செருப்பாக, வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக சுத்தம் செய்து கடைசியில் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் துடைப்பம் போல நாம் எண்ணாமல், பூஜை அறையில் இருக்கும் கடவுளாக முதியோர்களை வணங்க வேண்டும்.வீட்டிலுள்ள முதியவர்களுக்கு நீங்கள் ஒன்றும் பெரிய பொருளோ பணமோ கொடுத்து உங்கள் அன்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. தினமும் இரண்டு வார்த்தைகள் “சாப்பிட்டீங்களா? நல்லா துாங்குனீங்களா?” என்று மட்டும் கேட்டால் போதும். அவர்கள் தினமும் நன்றாக சாப்பிட்டு, துாங்குவார்கள். அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் பொன்னோ பொருளோ அல்ல, இந்த இரண்டு வார்த்தைகள்தான்.தாத்தா பாட்டிகளின் மேல் அக்கறை கொள்வோம். அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வோம்.-டாக்டர் ஜெ.ஜெய வெங்கடேஷ்மருத்துவ இதழியலாளர், மதுரை 98421 67567

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
16-செப்-202009:12:34 IST Report Abuse
Rajesh ஒரு சில பெற்றோர்கள், அவர்களின் பெண் வழி பேரப்பிள்ளைகளை ஒரு மாதிரியும், மகன் வழி பேரப்பிள்ளைகளை ஒரு மாதிரியும் நடத்துவது மனதிற்கு நெருடலாக உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X