அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறையுது'

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:''தமிழகத்தில், அரசு எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா நோய் பரவல் குறைய துவங்கி உள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில், கொரோனா தொற்றின் பாதிப்பு, ஐந்து லட்சத்தையும்; இறப்பு எண்ணிக்கை, 8,000த்தையும் தாண்டி விட்டது. தொழில், பொருளாதாரம், தனி நபர் வருமானம், தனி நபர் சுகாதாரம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பேரிடர் காலத்திற்கு, குடும்பத்திற்கு, 5,000 ரூபாய் வழங்கும்படி கூறினேன்; அதை கொடுக்கவில்லை.

மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், ஆய்வகங்கள் வாரியாக, கொரோனா சோதனை, படுக்கைகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும் என்றேன்; அதை செய்யவில்லை.கொரோனா இறப்பு எண்ணிக்கை, பரிசோதனை, பாதிப்பு குறித்த, அரசு புள்ளி விபரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இது தொடர்பாக, வெள்ளை அறிக்கையை, முதல்வர் சபையில் தாக்கல் செய்ய வேண்டும்.

அ.தி.மு.க.,- பரமசிவம்: கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு எடுத்த நடவடிக்கையை, மக்கள் பாராட்டுகின்றனர். எதிர்க்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரிசோதனையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளில், பரிசோதனை முடிவு தெரிய ஏழு நாட்களாகிறது. தமிழகத்தில், 24 மணி நேரத்தில், முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழகத்தில், இறப்பு விகிதம், 1.6 சதவீதமாக உள்ளது. உண்மையில் கொரோனாவால் மட்டும் இறப்போர், 0.3 சதவீதம் மட்டுமே. மற்றவர்கள் இணை நோய் காரணமாக இறக்கின்றனர். குணமடைவோர் எண்ணிக்கை, 89 சதவீதமாக உள்ளது.முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாக, நோய் பரவல் குறைந்துள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனைக்கு வந்தால், உடனடியாக சிகிச்சை பெறலாம். பயமோ, பதற்றமோ வேண்டாம். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: தி.மு.க., சார்பிலும் நன்றியை தெரிவிக்கிறோம். மார்ச் மாதம் கொரோனா வந்தபோது, ஒரு உயிரை கூட இழக்க விட மாட்டோம் என்றீர்கள். இன்று ஏராளமானோர் இறந்துள்ளனர். இதை முன்னதாகவே எதிர்க்கட்சி எச்சரித்தது.

முதல்வர்: அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்ததால், நோய் பரவல் தமிழகத்தில் குறைய துவங்கி உள்ளது. ஒரு உயிரை கூட இழக்கக்கூடாது என்பது, அரசின் நிலைப்பாடு. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.கொரோனாவுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.எனினும், அரசு எடுத்த நடவடிக்கையால், நோய் பரவல் தமிழகத்தில் குறைய துவங்கி உள்ளது. நோய் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X