கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் கறுப்பு ஆடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை,:'அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் கறுப்பு ஆடுகள் உள்ளன; வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு கிராமத்தில், வீட்டுவசதி வாரிய திட்டத்துக்காக, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பாணை, 1996ல் வெளியானது; 1999ல், இழப்பீடும் நிர்ணயிக்கப்பட்டது.இதை எதிர்த்து, நில உரிமையாளர்கள் சரஸ்வதி, பாலன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, எங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்படவில்லை. பட்டா, அடங்கல் ஆவணங்கள், எங்கள் பெயரில் தான் இருந்தன.நிலத்தை கையகப்படுத்தி விட்டதாகவும், வாரியத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர்.தற்போது, வீட்டு வசதி வாரியத்தின் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

எங்களிடம் இருந்து நிலத்தை எடுக்கவும் இல்லை. எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை, காலாவதியாகி விட்டதாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகினர். விசாரணையின் போது, அசல் ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும், கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:மார்ச் மாதம், இந்த வீட்டுவசதி திட்டம் குறித்து, சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. அதன்பின், டெண்டர் கோரப்பட்டு, ஜூன் மாதம் திறக்கப் பட்டது. வருவாய் ஆவணங்களில், 1998ல் இருந்து, 2020 வரை, நில உரிமையாளர்கள் பெயர் தான் இருந்தன.

அசல் ஆவணங்கள் காணாமல் போனதால், நிலங்கள் எடுப்பு மற்றும் இழப்பீடு குறித்து, அரசிடம் இருந்து விபரங்களை பெற முடியவில்லை. நீதிமன்றத்தை தடுக்கும் வகையில், வேண்டு மென்றே ஆவணங்கள் மறைக்கப்பட்டதா என, தெரியவில்லை.ஆவணங்கள் காணாமல் போய் விட்டது என நீதிமன்றத்தில் சொல்வது, அதிகாரிகளின் கவனக்குறைவை காட்டுகிறது. சட்டத்தின் பார்வையில், நிலத்தை எடுத்ததாகவோ, இழப்பீடு வழங்கப்பட்டதாகவோ இல்லை. எனவே, மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள், மனுதாரர் களைப் பொறுத்தவரை காலாவதியாகி விட்டன.பொது மக்கள் நலன் கருதி, பல திட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பினாலும், அரசின் மட்டத்திலும், அரசு நிறுவனங்கள் மட்டத்திலும், கறுப்பு ஆடுகள் உள்ளன. தங்கள் வளர்ச்சிக்காக, திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.

அசல் ஆவணங்கள் காணாமல் போயிருக்காது; யாரோ ஒருவரிடம் பாதுகாப்பாக இருக்கும். இந்த உத்தரவுக்கு பின், ஆவணங்களை அழித்து விட முயற்சிகள் நடக்கலாம். தனி நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், இந்த கறுப்பு ஆடுகள் சுதந்திரமாக திரியும். சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும். கடைசியில், பொது நலனுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், எச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X