பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் மாணவர்கள் அலைக்கழிப்பு! 10ம் வகுப்பு தனித்தேர்வு ஏற்பாடுகளில் குளறுபடி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:பத்தாம் வகுப்பு துணை பொதுத்தேர்வு எழுதவுள்ள, மாற்றுத்திறன் கொண்ட தனித்தேர்வர்களுக்கு, நீண்ட துாரம் தேர்வு மையம் அமைத்துள்ளதோடு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதாக, பெற்றோர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 21 முதல், 26ம் தேதி வரை துணை பொதுத்தேர்வு நடக்கிறது. சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு, பல கி.மீ.,க்கு அப்பால், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையத்தில் செயல்படும் டபள்யூ.வி.எஸ்., சிறப்பு பள்ளியில் படிக்கும், 18 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, காரமடை தனியார் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று வேகமாக பரவிவரும் இச்சூழலில், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும், மாற்றுத்திறன் குழந்தைகளை தேர்வெழுத அழைத்து செல்வதில், சிக்கல்கள் இருப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அந்தந்த சிறப்பு பள்ளியையே தேர்வு மையமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.'கல்வி கேள்விக்குறி'சிறப்பு பள்ளி ஒருங்கிணைப்பாளர் பார்வதி கூறுகையில்,''ஆட்டிசம், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு, கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறது. இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனை மேற்கொள்வது சிரமமான காரியம். பிற தனித்தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில், இக்குழந்தைகளை அனுமதிப்பதற்கு பதிலாக, அந்தந்த சிறப்பு பள்ளிகளையே, தேர்வு மையமாக அமைக்கலாம். இச்சலுகை வழங்காவிடில், மாற்றுத்திறன் கொண்ட தனித்தேர்வர்களின் கல்வி கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்படும்,'' என்றார்.'அதிகாரம் இல்லை'முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்டபோது,'' ஐகோர்ட் உத்தரவுப்படி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்கிறோம். இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பித்தால், தேர்வு மையங்கள் அமைப்பதில் சிக்கல் இல்லை. தற்போது ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாற்றும் அதிகாரம், முதன்மை கல்வி அலுவலருக்கு இல்லை,'' என்றார்.''என் மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தை. முறைசார் பள்ளிகளை போல, சிறப்பு பள்ளிகளிலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களை போல், சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கும், தேர்வு ரத்து செய்திருக்க வேண்டும். சிறப்பு குழந்தைகளின் சிகிச்சை செலவினங்களுக்கே பெற்றோர் திண்டாடும் நிலையில், பல கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்ட, தேர்வு மையங்களுக்கு பிரத்யேக வாகன வசதி, ஏற்பாடு செய்து செல்வதும், கொரோனா பரிசோதனை நடத்துவதும் சிரமமான காரியம். சிறப்பு குழந்தைகள் அடிப்படை கல்வியாவது பெற வேண்டுமென பெற்றோர் சிரமப்படுகிறோம். கல்வித்துறைக்கும் இக்குழந்தைகள் மீது அக்கறை இருந்தால், சிறப்பு பள்ளிகளையே தேர்வு மையமாக அறிவிக்க வேண்டும்.- - கவிதா, மாற்றுத்திறன் குழந்தையின் தாய், கோவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X