சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் கே.வேலாங்குடி கிராமத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.
155 ஏக்கர் தரிசு நிலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கே.வேலாங்குடி கிராமத்தில் 30 ஏக்கர் நிலத்திலுள்ள கருவேல மரங்களை 25 லட்சம் ரூபாய் செலவில் அகற்றி கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதே போல் கிராமம் முழுவதும் அகற்ற கலெக்டர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.அந்த கிராமத்தை சீமைக்கருவேல மரம் இல்லாத முன் மாதிரி கிராமமாக மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். அவர் ஜனவரியில் 4 மணல் அள்ளும் இயந்திரங்களை கிராமத்திற்கு இலவசமாக பணி செய்ய வழங்கினார்.
கிராம மக்கள் தங்கள் பங்களிப்பான ரூ.7.5 லட்சம், சாக்கோட்டை ஒன்றியத்தில் 2.85 லட்சம் ரூபாய், கோட்டையூர் பேரூராட்சியில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆறு மாதமாக பணி நடந்தது. 155 ஏக்கரில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. பின்னர் 91 ஏக்கர் பெரிய கண்மாய், 34 ஏக்கர் பரப்புஉள்ள புதுக்கண்மாய், 25 ஏக்கர் பரப்புள்ள பறையன் கண்மாய், 3 ஏக்கர் பரப்புஉள்ள கந்தன் கண்மாய் முழுவதும் துார்வாரப்பட்டது. தற்போது அக்கிராமம் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத முன் மாதிரி கிராமமாக உருவாக்கப் பட்டுள்ளது.
சோலைமலை, விவசாயி: எங்கள் கிராமத்திற்கு உதவி கேட்டவுடன் மற்ற துறைகளான வேளாண்துறை, உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து பணிகளை துரிதமாக செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். எங்கள் கிராமத்தில் 365 குடும்பங்களில் பல இளம் தலைமுறையினர் வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து விட்டனர். தற்போது விவசாயத்தின்அருமை கருதி 155 ஏக்கர் நிலத்தை பண்படுத்தி கிராம மக்கள் கூட்டு பண்ணை திட்டத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
ஆர்.சுந்தரம், விவசாயி: எங்கள் கிராமத்தில் 25 ஆண்டுகளாக மழை இல்லாததால் சிறு, சிறு பிரிவுகளாக விவசாய பணிகளை செய்ய முடியாமல் நிலங்கள் தரிசாக இருந்தது. ஒருங்கிணைந்த நடவடிக்கையால் தரிசு நிலங்களை மீண்டும் விவசாய நிலங்களாக மாற்றியுள்ளோம். கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், என்றார்.துரைப்பாண்டி, மென் பொருள் பொறியாளர், கே.வேலங்குடி: கலெக்டர் நடவடிக்கையால் எங்கள் கிராமம் விவசாய கிராமமாக மாறியுள்ளது. ஊர் ஒற்றுமை காரணமாக டிரஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களின் கூட்டுப்பொறுப்பில் விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளோம், என்றார்.
வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:அரசு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும்திட்டத்தை அறிவிக்க சிவகங்கை மாவட்டம் முன் மாதிரியாக திகழ்ந்தது. சீமைக்கருவேல மரம் இல்லா கிராமத்திற்கு வேலாங்குடி முன் மாதிரி கிராமமாக திகழும். தரிசாக இருந்த நிலத்தில் பயிறு வகைகள் சாகுபடி செய்யவுள்ளனர், என்றார்.கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்ததாவது:திருப்புத்துார் பகுதியில் நெடுமரம் என்ற கிராமத்தில் 30 ஏக்கர் தரிசு நிலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். இதனை முன் மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக மாற்ற கே.வேலாங்குடி கிராமத்தினை சீரமைப்பு செய்துஉள்ளோம். இதே போல் அனைத்து கிராமங்களும் மாறினால் வேளாண் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE