புதுடில்லி:ஊரடங்கால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்தது.

பார்லிமென்ட் ராஜ்யசபாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி சவுபே நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் 25 முதல் மே 31-ந்தேதி வரையிலான ஊரடங்கு கால கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் ஊரடங்குக்கு பிந்தைய காலகட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் சீரான அதிகரிப்பை காட்டி உள்ளது.

நகர்ப்புறங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் தொற்றுகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.நாட்டில் 10 லட்சம் பேரில் 3,328 பேருக்கு தொற்று, 55 பேர் இறப்பு என்பது, உலகிலேயே மிக குறைவான ஒன்றாகும்.
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வென்டிலேட்டர்கள் வழங்குவதற்காக ரூ.898.93 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பாரத் மின்னணு நிறுவனம் 30 ஆயிரம் தீவிர சிகிச்சை பிரிவு வென்டிலேட்டடர்களை வினியோகித்து நிறுவுவதற்கு சுகாதார அமைச்சகம் ஆர்டர் வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தொற்றுநோயின் போக்கு, அவை முன்வைக்கும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வென்டிலேட்டர்கள் ஒதுக்கப்படுவதால், அனைத்து மாநிலங்களும் சம விகிதத்தில் பலன் அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE