தமிழ்நாடு

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020
Share
Advertisement
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கி, செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவ மழையும், அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த ஆண்டு மழை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த பருவமழை காலங்களில் கடலுார் மாவட்டம் பெரிதும் பாதிக்கிறது. 2015ல் பெய்த வடகிழக்கு பரவமழையால் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளானது.அதிலிருந்து உஷாரான மாவட்ட நிர்வாகம், வடகிழக்கு பருவ மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் கடந்த மாத இறுதியில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் வெளியேற்றவும், பேரிடர் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை பிரிவை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.மேலும், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போதுமான அளவு இருப்பு வைக்கவும், பாலங்கள் சாலைகளில் பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்ய வேண்டும். சாலையில் மரங்கள் விழுந்தால் உடன் அகற்ற கருவிகள் தயார்படுத்த வேண்டும். மருத்துவமனையில் போதுமான மருந்து வசதிகளும், போதுமான அவசர கால மருத்துவ ஊர்திகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு மருத்துவ குழு அமைத்து தயார் நிலையில் இருக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உணவு, தானியங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நீச்சல் வீரர்கள் பைபர் படகுகள் தயார் நிலையில் வைக்கவும், மின் கம்பிகளுக்கு மேல் செல்லும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், நேற்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்தார். வெள்ளப்பெருக்கு காலங்களில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை கண்காணித்து பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்க வேண்டும் என கூறி, சிதம்பரம் அருகே கீழகுண்டலபாடியில் மழைக்காலங்களில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்படவுள்ள கட்டடத்தை பார்வையிட்டார்.

கடந்த ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து மீண்டும் வருங்காலங்களில் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.சிதம்பரம் பொதுப் பணித் துறை கொள்ளிட வடிநில கோட்ட செயற்பொறியாளர் சாம்ராஜ், ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதிகாரிகளுக்கு 'டோஸ்'காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர், மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், இப்ராகிம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

அலுவலக வராண்டாவில் இருந்த பேரிடர் தடுப்பு கருவிகளை ஆய்வு செய்த போது, சில கருவிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் டென்ஷன் ஆன கலெக்டர், பழுதை சரி செய்யவில்லையா என கேட்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். இதனால் அதிகாரிகள் இடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்தையும் சரியாக வைத்திருக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X