தமிழ்நாடு

கோரிக்கை: சேதமடைந்த அரசு பள்ளிகளை சீரமைக்கமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள அரசு பள்ளி கட்டடங்களை ஊரடங்கின் போதே சரிசெய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 700க்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விலையில்லா சீருடை, பாடபுத்தகங்கள், காலணி, உபகரணங்கள், சத்துணவு, ஊக்கத்தொகை, தேசிய திறனாய்வு தேர்வு உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பாட புத்தகங்கள் அனைத்தும், தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையிலும், பாடத்திற்கு கீழ் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூஆர் கோடும் அச்சிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள், பெற்றோர்களும் மொபைல் போனில் ஸ்கேன் செய்து பாடத்தை தெரிந்து கொள்ளலாம்.ஆனாலும், அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர். அதற்கான காரணங்களில் முக்கியமாக கருதப்படுவது, கழிவறை மற்றும் கட்டடங்கள். பல அரசு பள்ளிகளில் ஏதாவது ஒரு வகுப்பறை கட்டடம் பழமை வாய்ந்தும் மேற்புற ஓடுகள் உடைந்து, இடிந்து விழும் அபாய நிலையிலும் இருக்கின்றன. மழை காலத்தில் வகுப்பறைகளில் மழைநீர் ஒழுகும் நிலையில் உள்ளது. பள்ளிகளில் கழிப்பறை கட்டடம் இருந்தாலும் முறையான பராமரிப்பிலாததால் அதை உபயோகப்படுத்துவதே கிடையாது. இதனால் பெண்குழந்தைகள் இயற்கை உபாதைக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். இது போன்ற காரணங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க மறுக்கின்றனர்.கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் கட்டடப்பட்ட ஓடு வகுப்பறைகள் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ளன

. இந்த கட்டடங்கள் சேதமடைந்திருந்தால் ஊராட்சி செயலாளர் வழியாக பி.டி.ஓ.,விற்கு தகவல் அளிக்கப்படுகிறது. 2005க்கு பின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சேதமடைந்திருந்தால் வட்டார கல்வி அலுவலர்கள் வழியாக டி.இ.ஓ., சி.இ.ஓ., க்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பள்ளிகல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.ஆனால், சொற்ப அளவிலான பள்ளி கட்டடங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுகிறது. அரசியல் பிரமுகர்கள் தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி சொந்த ஊரில் உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களை உடனடியாக சீரமைக்கின்றனர். மற்ற பகுதிகளில் கட்டடம் சீரமைப்பு மற்றும் புதுப்பிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்க அனுமதி கிடைத்தாலும், வேலைநாட்களில் கட்டடம் இடிப்பு, புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால் மாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதறி வேடிக்கை பார்ப்பதிலேயே இருக்கும். பல கிராமங்களில் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என கருதி விடுமுறை நாட்களில் மட்டுமே கட்டட பணிகள் நடைபெறும்.

எனவே, அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையினை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டத்தில் சேதமடைந்துள்ள அரசு பள்ளிக் கட்டடங்களை கணக்கெடுத்து, அதை சீரமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும். தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்த பணியினை மேற் கொள்ள சரியான தருணமாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X