பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் இயக்கம்: தொழிலை காக்க அரசுகள் உதவ வலியுறுத்தல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சேலம்: ஐந்து மாதத்துக்கு பின், சேலம் உள்பட முக்கிய நகரங்களில், 25 சதவீத தனியார் பஸ்கள் இயங்க தொடங்கிய நிலையில், அத்தொழிலை காக்க, மத்திய, மாநில அரசுகள் உதவ வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், கடந்த மார்ச், 25 முதல், தமிழகம் முழுதும், தனியாரின், 6,800 பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஜூனில், அரசு பஸ்கள் இயங்கிய நிலையில், அதே மாதம், 7ல், தனியார் பஸ்கள் இயங்க தொடங்கியபோதும், பயணியரிடம் வரவேற்பு இல்லாததால், ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டன. கடந்த, 1 முதல், பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதித்த நிலையில், அரசு பஸ்கள் இயங்குகின்றன. ஆனால், தனியார் பஸ் உரிமையாளர்கள், ஊரடங்கு கால காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்; அதிகளவில் பயணியரை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஸ்களை இயக்க மறுத்தனர். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வாய்மொழியாக பிறப்பித்த உறுதிமொழியை ஏற்று, ஐந்து மாததத்துக்கு பின் நேற்று முன்தினம் முதல், தமிழகத்தில், பரவலாக தனியார் பஸ்களை இயக்க, மாநில சங்க நிர்வாகிகள் அனுமதி அளித்தனர். அதன்படி, சேலத்தில் உள்ள, தனியாரின், 440 பஸ்களில், நேற்று முதல், 25 சதவீத பஸ்களின் இயக்கம் தொடங்கியது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலர் ரவீந்திரன் கூறியதாவது: தற்போது, 25 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியரின் வருகையை பொறுத்து, படிப்படியாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அக்டோபர் முதல், அனைத்து பஸ்களும் இயக்கத்துக்கு வரும். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். தற்போது டீசல் விலை, 15 ரூபாய், சுங்க கட்டணம், 15 சதவீதம், உதிரிபாகம், டயர் விலை, 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பஸ்கள் இயங்காத காலத்தில், அரசுக்கு காலாண்டு வரியை உரிமையாளர் செலுத்தியதால், நிதி நெருக்கடியில் உள்ளனர். பஸ்களுக்கு, வங்கிகளில் பெற்ற கடனுக்கு, தவணைத்தொகையை, ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வட்டி, அபராத வட்டி விதித்து, பஸ் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. அதனால், மத்திய, மாநில அரசுகள் நிதி நிறுவனங்கள், வங்கிகள் விதித்துள்ள வட்டியை தள்ளுபடி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலைமை சரியாகும் வரை, சுங்க கட்டணம் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும். டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும். தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, மானிய விலையில் டீசல் வழங்கி, தொழிலை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X